தி.மு.க., ஓட்டு சதவீதம் அதிகமா... குறைவா?

தினமலர்  தினமலர்
தி.மு.க., ஓட்டு சதவீதம் அதிகமா... குறைவா?

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., 37.7 சதவீத ஓட்டுகளுடன், 133 இடங்களில் - தி.மு.க., சின்னத்தில் போட்டி சேர்த்து - வென்று ஆட்சியை பிடித்துள்ளது. 1996ல் இருந்து கணக்கிட்டால், தி.மு.க., வின் இரண்டாவது குறைந்த ஓட்டு சதவீதம் இது.

* 1996ல் அ.தி.மு.க., எதிர்ப்பு அலை வீச, தி.மு.க., அதிகபட்சமாக, 42.1 சதவீத ஓட்டுகளுடன், 173 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது.

* 2006ல், 26.5 சதவீத ஓட்டுகளுடன், 96 இடங்களில் வென்று, 'மைனாரிட்டி' ஆட்சி அமைத்தது. இதுவே, முதலாவது குறைந்த ஓட்டு சதவீதம்.

* 2016ல், 31.39 சதவீத ஓட்டுகளுடன், 89 இடங்கள் பெற்றது.* 2019 லோக்சபா தேர்தலில், 32 சதவீதமாக இருந்த தி.மு.க., ஓட்டு சதவீதம், 2021, சட்டசபை தேர்தலில், 5 சதவீதம் அதிகரித்து, 37.7 ஆக உள்ளது. இதற்கு காங்., கட்சிக்கு குறைவாக, 25 தொகுதிகள் ஒதுக்கியதே காரணம். 2019, லோக்சபா தேர்தல் - 12.5 சதவீதம் - உடன் ஒப்பிடுகையில், காங்., ஓட்டு இம்முறை, 5 சதவீதம் குறைந்துள்ளது. தி.மு.க., 173 தொகுதிகளில் போட்டியிட்டதன் மூலம் காங்., ஓட்டு வங்கியின் ஒரு பகுதியை தன்வசமாக்கியது.

* அ.தி.மு.க., எப்படி?



* அ.தி.மு.க., வை பொறுத்தவரை, 2001ல் மிக குறைவாக, 31.4 சதவீத ஓட்டுகளுடன் 132 இடங்களில் வென்று, ஆட்சியை பிடித்தது.

* 2011ல் 38.4 சதவீத ஓட்டுகளுடன், 150 இடங்களில் வென்று, ஆட்சியை கைப்பற்றியது.

* 2016ல், 40.8 சதவீத ஓட்டுகளுடன், 136 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்தது.

* 2019 லோக்சபா தேர்தலில், 18 சதவீத ஓட்டு தான் பெற்றது. இதை, 2021 சட்டசபை தேர்தலில், 34.24 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்கு பா.ம.க.,வுக்கு குறைவாக, 23 தொகுதிகள் ஒதுக்கியதே காரணம். இதன் மூலம் பா.ம.க.,வின் 2 சதவீத ஓட்டுகள் அ.தி.மு.க., வசம் சென்றது. 2016 சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், சுமார் 7 சதவீதம் குறைவு.

கூட்டணி பாடம்



தி.மு.க., - அ.தி.மு.க., தங்களது கூட்டணி கட்சிகளுக்கு முன்பு அதிக சீட்களை வழங்கின. 2006ல் காங்., - பா.ம.க.,வுக்கு அதிக சீட்களை கொடுத்து, 130 தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட்டது. இதில், 96ல் மட்டும் வெல்ல, 'மைனாரிட்டி அரசு' என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.இதேபோல, 2001ல் அ.தி.மு.க., தன் கூட்டணி கட்சிகளான காங்., - த.மா.கா., - பா.ம.க.,வுக்கு 94 இடங்களை ஒதுக்கீடு செய்தது. 140 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.இருப்பினும் பலமான கூட்டணி அமைந்ததால், 130 இடங்களில் வென்று, தனிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தது. இம்முறை, இரு கட்சிகளும் கூட்டணி விஷயத்தில் கறாராக இருந்தன. தி.மு.க.,வின் சரியான கூட்டணி வியூகம், ஆட்சியை பிடிக்க உதவியது.

மூலக்கதை