கொரோனா பிடியில் கோவை: அபாய கட்டத்தில் ஆக்சிஜன் கையிருப்பு

தினமலர்  தினமலர்
கொரோனா பிடியில் கோவை: அபாய கட்டத்தில் ஆக்சிஜன் கையிருப்பு

கோவை :கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், கோவைக்கு அனுப்பப்படும், திரவ நிலை ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 'அடுத்த ஒரு வாரத்தில், பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்' என, ஆக்சிஜன் வினியோகஸ்தர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு, 1,500க்கும் மேல் உள்ளது.

10 நாட்களில் மட்டும், 9,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.தற்போது, 8,000க்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.இதனால், பெரும்பாலானோருக்கு செயற்கை சுவாசம் வாயிலாக தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில், மருத்துவமனைகளுக்கு போதுமான அளவு திரவ நிலை ஆக்சிஜன் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த சில நாட்களில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தீர்ந்து, நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்கின்றனர், ஆக்சிஜன் வினியோகஸ்தர்கள்.

கேரளா சப்ளை நிறுத்தம்கோவை, இடிகரையில் உள்ள ஆக்சிஜன் கம்பெனி மேலாளர் லட்சுமிகுமார் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், இடிகரை, நரசிம்ம நாயக்கன் பாளையம், சின்னவேடம்பட்டி, தென்னம்பாளையம் மற்றும் கிணத்துக்கடவு ஆகிய இடங்களில், 'ரீ பாட்லிங்' தொழிற்சாலைகள் உள்ளன.வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும், திரவ நிலை ஆக்சிஜன், இந்த தொழிற்சாலைகளில், சேமித்து வைக்கப்படுகின்றன. பின், இங்கிருந்து மருத்துவமனைகளுக்கு, திரவ நிலை ஆக்சிஜனாகவும் அல்லது சிலிண்டரில் அடைக்கப்பட்ட பிராண வாயுவாகவும் மாற்றப்பட்டு, வினியோகம் செய்யப்படுகின்றன.மைனஸ் 196 டிகிரியில் திரவ நிலை ஆக்சிஜனாகவும், மைனஸ் 194 டிகிரிக்கு கீழ் சென்றால், அது வாயுவாக மாறி விடும்.

வினியோகம்தற்போதைய சூழலில், மாதத்திற்கு ஐந்து சிலிண்டர் பயன்படுத்திய ஒரு மருத்துவமனைக்கு, கொரோனாவுக்கு பின், ஒரு நாளைக்கே ஐந்து சிலிண்டர் தேவைப்படுகிறது.ஆனால், கோவையில் உள்ள, ஏழு ரீ பாட்லிங் தொழிற்சாலைகளுக்கு, சில நாட்களாக ஆக்சிஜன் சப்ளையே இல்லை. ஒரு ரீ பாட்லிங் தொழிற்சாலைக்கு நாள் ஒன்றுக்கு, 15 டன் ஆக்சிஜன் பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது, மூன்று நாளைக்கு ஒரு முறை, வெறும், 5 டன் அளவு மட்டுமே வினி
யோகம் செய்யப்படுகிறது.இதில், கேரள மாநிலம், கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையில் இருந்து தான், பெரும்பாலும், கோவைக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு அதிகம் அனுப்பப்படுவதால், கோவைக்கு வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு, நேற்று இரவு, 8:00 மணி வரை மட்டுமே, நோயாளிகளுக்கு அளிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் இருக்கிறது.கோவைக்கு தினமும் குறிப்பிட்ட அளவு ஆக்சிஜன் கிடைப்பதற்கு, அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, மக்களும், பாதுகாப்பாக இருந்து, அவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.2 நாளில் கையிருப்பு காலிஅனைத்திந்திய தொழிற்சாலை காஸ் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் ஜெயகுமார் கூறியதாவது:கேரளாவின், கஞ்சிக்கோட்டில் தயாரிக்கப்படும் திரவ நிலை ஆக்சிஜன், கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கே போதுமானதாக இருக்கிறது. கோவைக்கு இதுவரை அங்கிருந்து தான், 40 முதல், 50 டன் வரை ஆக்சிஜன் பெறப்பட்டு வந்தது. தற்போது வெறும், 5 முதல், 10 டன் அளவிற்கு தான் வினியோகம் செய்யப்படுகிறது. இன்னும், இரண்டு நாட்கள் இதே நிலை நீடித்தால், நிறைய மருத்துவமனைகளில் ஆக்சிஜனே இருக்காது என்பதே உண்மை. கோவை மாவட்டத்திற்கு தற்போதைய சூழலில், நாள் ஒன்றுக்கு, 2,000 சிலிண்டர் வரை தேவைப்படுகிறது. நாளுக்கு நாள் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நோயாளிகளை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை