இந்தியா - பிரிட்டன் வர்த்தகம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு

தினமலர்  தினமலர்
இந்தியா  பிரிட்டன் வர்த்தகம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு

லண்டன்:இந்தியா-பிரிட்டன் இடையே, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள பிரிட்டன், இந்தியா உடனான வர்த்தக கூட்டுறவை மேலும் வலுப்படுத்த தீர்மானித்துள்ளது.இது குறித்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:இந்தியா - பிரிட்டன் இடையே, புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு திட்டங்கள் அமலுக்கு வர உள்ளன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை, இந்திய நிறுவனங்கள், பிரிட்டனில் மேற்கொள்ள உள்ளன.

அவற்றில் ஒன்றாக, 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும், சீரம் இன்ஸ்ட்டிட்யூட் நிறுவனத்தின், 2,400 கோடி ரூபாய் முதலீடும் அடங்கும். இந்நிறுவனம், தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை, பிரிட்டனில் அமைக்க உள்ளது. இதன் மூலம், 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் கிடைக்கும். பிரிட்டனில், புதிதாக, 6,500 வேலைவாய்ப்புகள் உருவாகும். 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த துணை புரியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நேற்று, இந்தியா - பிரிட்டன் வர்த்தக முதலீடு தொடர்பாக, பிரதமர் மோடியுடன், பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார்.

புதிய அத்தியாயம்!

பிரதமர் நரேந்திர மோடி உடனான பேச்சுக்கு பிறகு வெளியிட்டுள்ள செய்தியில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாவது:பிரிட்டன் - இந்தியா இடையேயான நீண்ட கால உறவில் புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளோம். இரு தரப்பு உறவில் மிகப் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த உறுதி எடுத்துள்ளோம்.

விரிவான ராணுவ கூட்டாளி என்ற அந்தஸ்தை, இந்தியா நமக்கு அளித்துள்ளது. இதை பெறும் முதல் ஐரோப்பிய நாடு பிரிட்டன் ஆகும். ஏற்கனவே, வர்த்தகம் தொடர்பான உறவில் பெரும் வளர்ச்சி உள்ளது. தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வது குறித்து அடுத்து பேச உள்ளோம். சுகாதாரம், பருவ நிலை மாறுபாடு, தொழில், கல்வி, அறிவியல் - தொழில்நுட்பம், ராணுவம் என, பல துறைகளிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை, 2030ம் ஆண்டுக்குள் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை நாடு கடத்துவது குறித்தும், குடியேற்ற கொள்கை தொடர்பாகவும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

மூலக்கதை