ஆஸ்திரேலிய வீரர் நிதியுதவி: ‘கொரோனா’ நிவாரணத்துக்கு | மே 04, 2021

தினமலர்  தினமலர்
ஆஸ்திரேலிய வீரர் நிதியுதவி: ‘கொரோனா’ நிவாரணத்துக்கு | மே 04, 2021

புதுடில்லி: ‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பெஹ்ரன்டோர்ப் நிதியுதவி வழங்குகிறார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு உதவும் வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், பிரட் லீ, இந்தியாவின் ஷிகர் தவான், ஜெயதேவ் உனத்கட், விண்டீசின் நிக்கோலஸ் பூரன், ஐ.பி.எல்., ராஜஸ்தான், டில்லி அணிகள், கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐ.பி.எல்., தொடருக்கான சென்னை அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ப் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளார். இதற்காக இவர், இந்தியாவில் ‘கொரோனா’ தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவி செய்து வரும் ‘யுனிசெப்’ திட்டத்திற்கு நன்கொடை வழங்குகிறார்.

இதுகுறித்து பெஹ்ரன்டோர்ப் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘தற்போது இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பது மிகவும் கொடூரமானது. மிகவும் வேதனை அளிக்கிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களிடம் இருந்து எனது எண்ணங்கள் வெகு தொலைவில் இல்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதற்காக அவர்களுக்கு உதவிடும் வகையில் ‘யுனிசெப்’ திட்டத்தின் மூலம் நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளேன்,’’ என, தெரிவித்திருந்தார்.

பெஹ்ரன்டோர்ப், 2019ல் ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக முதன்முறையாக விளையாடினார். இந்த சீசனுக்கான சென்னை அணியில் இருந்து ஹேசல்வுட் விலகியதால், பெஹ்ரன்டோர்ப் தேர்வானார்.

மூலக்கதை