கொரோனா ‘வேகத்தில்’ ஐ.பி.எல்., ‘கிளீன் போல்டு’ * தொடர் பாதியில் நிறுத்தம் | மே 04, 2021

தினமலர்  தினமலர்
கொரோனா ‘வேகத்தில்’ ஐ.பி.எல்., ‘கிளீன் போல்டு’ * தொடர் பாதியில் நிறுத்தம் | மே 04, 2021

புதுடில்லி: வீரர்களுக்கு கொரோனா வேகமாக பரவ, ஐ.பி.எல்., தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன்கடந்த ஏப். 9ல் துவங்கியது.இதுவரை 29 போட்டிகள்நடந்தன.இரண்டாவது கட்ட போட்டிகள் நடந்த நிலையில்,கோல்கட்டாஅணியின்தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியார் என இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.இதனால் பெங்களூரு–கோல்கட்டா மோத இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.

சென்னை பாதிப்பு

டில்லியில் உள்ள சென்னை அணியின்பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, பஸ் உதவியாளக்கும்(‘கிளீனர்’)பாதிப்பு ஏற்பட்டது. சென்னை வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து ஐதராபாத் அணிக்கு எதிராக மோத வேண்டிய ஆட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்னும் இருவர்

நேற்று ஐதராபாத் அணியின் சகா, டில்லி ‘சீனியர்’ சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. தவிர வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க தயங்கியதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு சார்பில் ஆலோசிக்கப்பட்டது. பின் வெளியான அறிக்கை:

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர், பணியாளர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பி.சி.சி.ஐ., சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை.  அணி உரிமையாளர்கள் உட்பட அனைவரது உடல்நலனையும் கருத்தில் கொண்டு, 14வது ஐ.பி.எல்., சீசனை காலவரையின்றி ஒத்திவைக்கிறோம்.

இந்த கடினமான காலத்தில் இந்திய மக்களிடம் சில நல்லெண்ணங்களையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர முயற்சித்தோம். எப்படி இருப்பினும் தொடரை பாதியில் நிறுத்துவது கட்டாயமாகி விட்டது. அனைவரும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கவுள்ளனர். இத்தொடரில் பங்கேற்ற அனைவரையும் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்க, பி.சி.சி.ஐ., அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து முயற்சிகளையும் செய்யும். தொடரை சிறப்பாக நடந்த உதவி செய்த வீரர்கள், மாநில சங்கங்கள், ஸ்பான்சர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரூ. 2,500 கோடி

ஐ.பி.எல்., தொடர் 14வது சீசனில் மொத்தம் 52 நாளில் 60 போட்டிகள் நடக்க இருந்தன. இதில் 29 போட்டிகள் தான் முடிந்தன. நேரடி ஒளிபரப்புக்கு போட்டி ஒன்றுக்கு ரூ. 54.5 கோடி, ஸ்டார் நிறுவனம் தருகிறது. இதன் படி 29 போட்டிக்கு ரூ. 1,580 கோடி மட்டும் கிடைக்கும்.

தொடரை பாதியில் நிறுத்தியதால் மீதமுள்ள போட்டிகளுக்கு ரூ. 1,690 கோடி வரை இழப்பு ஏற்படும். ஸ்பான்சர் வகையில் ரூ. 500 கோடி என ஒட்டுமொத்தமாக ரூ. 2,200 கோடி முதல் ரூ. 2,500 கோடி வரை பி.சி.சி.ஐ.,க்கு இழப்பு ஏற்படும்.

 

எட்டு வீரர்கள்

முதன் முதலில் டில்லி வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா ஏற்பட்டது. அடுத்து கோல்கட்டாவின் நிதிஷ் ராணா, பெங்களூரு அணியின் தேவ்தத் படிக்கல், டேனியல் சாம்ஸ் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் ஐ.பி.எல்., தொடர் துவங்கும் முன் பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தவர்களில் முதலில் கோல்கட்டாவின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் பாதிக்கப்பட்டனர்.

சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி, பஸ் ‘கிளீனர்’ ஒருவர், ஐதராபாத் அணி விக்கெட் கீப்பர் சகா, டில்லி அணி சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா என பட்டியல் நீண்டதால், தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.

 

சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி உள்ளார். ஏற்கனவே அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி, பஸ் கிளீனருக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் ஹசிக்கும், முதல்கட்ட சோதனையில் பாதிப்பு உறுதியானது. 

 

நிறுத்தப்பட்டது ஏன்

வீரர்களை கண்காணிக்க பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ்., கருவியில் தவறு நேர்ந்தது, கொரோனா பாதுகாப்பு வளையம் அமைப்பதற்கு ஏற்ப சரியான ஓட்டல்களை, சரியான நேரத்தில் கண்டறிய முடியாதது, மைதானம், ஓட்டல் பணியாளர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாதது, போட்டிக்காக வேறு இடங்களுக்கு பயணம் செய்தது உட்பட பல காரணங்களால் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட, வேறு வழியில்லாத நிலையில் தொடர் நிறுத்தப்பட்டது.

 

மீண்டும் எப்போது

இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் (ஜூன் 18–22, சவுத்தாம்ப்டன்), இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. பின் செப்டம்பரில் எவ்வித போட்டிகளும் இல்லை. இந்த நேரத்தில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனில், மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது.

 

கடைசி முயற்சி

வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால், மீதமுள்ள அனைத்து போட்டிகளையும் மும்பையின் வான்கடே, பிரபோர்ன், டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடத்தலாம் என பி.சி.சி.ஐ., திட்டமிட்டது. ஆனால் புதியதாக சகா, அமித் மிஸ்ரா என பல வீரர்களுக்கு கொரோனா ஏற்பட, இந்த திட்டம் கைவிடப்பட்டது.

 

மூன்றாவது சோதனையில்...

ஐதராபாத் அணி விக்கெட் கீப்பர் சகா, இவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இருப்பினும் சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். சோதனையில் ‘நெகட்டிவ்’ என வந்தது. தொடர்ந்து காய்ச்சல் இருக்க, உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். இவரிடம் நடந்த மூன்றாவது கட்ட சோதனையில் கொரோனா உறுதியானது.

 

மாலத்தீவில் ஆஸி., வீரர்கள்

ஐ.பி.எல்., தொடரில் ஸ்மித், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், வார்னர், பயிற்சியாளர்கள் பாண்டிங், மைக்கேல் ஹசி உட்பட சுமார் 40 ஆஸ்திரேலியர்கள் உள்ளனர். இந்தியாவில் இருந்து விமானங்கள் தரையிறங்க மே 15 வரை ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப முடியாது.

இவர்களுக்கு எவ்வித சலுகையும் காட்டப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தது ஆஸ்திரேலிய அரசு. இதனால் ஸ்மித், கம்மின்ஸ், மேக்ஸ்வெல், பாண்டிங் உள்ளிட்டோர் மாலத்தீவு சென்று தற்காலிகமாக தங்க முடிவு செய்துள்ளனர்.

 

அச்சம் தந்த மிஸ்ரா

கடந்த ஏப். 27ல் பெங்களூருவுக்கு எதிரான போட்டியின் போது பந்து வீசிய டில்லி வீரர் அமித் மிஸ்ரா, தவறுதலாக பந்தை பளபளபாக்க எச்சில் பயன்படுத்தினார். இதை பார்த்த அம்பயர், அவரை எச்சரித்து, பந்தை சுத்தப்படுத்தி தந்தார். தற்போது அமித் மிஸ்ராவுக்கு கொரோனா ஏற்பட்டது, கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை