ஜெர்மனி, பிரிட்டனில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர், கன்டெய்னர்கள் சிறப்பு விமானத்தில் சென்னை வருகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெர்மனி, பிரிட்டனில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர், கன்டெய்னர்கள் சிறப்பு விமானத்தில் சென்னை வருகை

மீனம்பாக்கம்: ஜெர்மனி, பிரிட்டனில் இருந்து கூடுதலாக தயாரிக்கப்படும் ஆக்சிஜனை சேமித்து வைக்க காலி கன்டெய்னர்கள், சிலிண்டர்கள் இன்று அதிகாலை இந்திய விமானப்படை சிறப்பு விமானத்தில் சென்னைக்கு வந்திறங்கின. இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை பரவல் மோசமான நிலையை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகளில் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க 4 மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆக்சிஜனை கூடுதலாக உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சேமிக்க, இந்தியாவில் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்ததும் இந்தியாவில் கூடுதலாக தயாராகும் ஆக்சிஜனை சேமிக்க தேவையான காலி கன்டெய்னர்கள், சிலிண்டர்களை வழங்க வெளிநாடுகள் முன்வந்துள்ளன.

இந்நிலையில், முதல்கட்டமாக இன்று காலை 5. 30 மணியளவில் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானத்தில் ஜெர்மனியில் இருந்து 4 கிரியோஜெனிக் ஆக்சிஜன் கன்டெய்னர்களும், பிரிட்டனில் இருந்து 900 ஆக்சிஜன் சிலிண்டர்களும் வந்திறங்கின.

இதையடுத்து, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.  

.

மூலக்கதை