திமுக வெற்றிக்காக நாக்கை அறுத்து வனிதா காணிக்கை.; விழிகள் குளமாகியதாக ஸ்டாலின் உருக்கமான அறிக்கை

FILMI STREET  FILMI STREET
திமுக வெற்றிக்காக நாக்கை அறுத்து வனிதா காணிக்கை.; விழிகள் குளமாகியதாக ஸ்டாலின் உருக்கமான அறிக்கை

பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா (32).

இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போடுவதாக வேண்டியுள்ளார்.

அதன்படி நேற்று காலை பரமக்குடி முத்தாளம்மன் கோயிலில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்துள்ளார்.

அதனை கோயில் உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற தி.மு.க தொண்டர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக் கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.

தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம். நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள்.

அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார் முக ஸ்டாலின்.

Woman cuts off her tongue to keep promise as DMK wins TN

மூலக்கதை