சி.டி. ஸ்கேன் எடுத்தால் உடல்நலத்துக்கு கேடு!: லேசான அறிகுறி கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு எய்ம்ஸ் எச்சரிக்கை..!!

தினகரன்  தினகரன்
சி.டி. ஸ்கேன் எடுத்தால் உடல்நலத்துக்கு கேடு!: லேசான அறிகுறி கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு எய்ம்ஸ் எச்சரிக்கை..!!

டெல்லி: லேசான அறிகுறி கொண்ட கொரோனா நோயாளிகள் சி.டி. ஸ்கேன் எடுப்பதில் நம்மையும் இல்லை என்றும் உடல்நலத்துக்கு கேடு என்றும் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு என்பது கட்டுக்கடங்காமலேயே உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் சி.டி. ஸ்கேன் எடுக்கின்றனர். இந்நிலையில் சி.டி. ஸ்கேன் எடுப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் பேசிய அவர், ஆய்வுகளின் படி 30 முதல் 40 சதவீத மக்கள் கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் எந்தவித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் குணமடைந்து வருகின்றனர். கொரோனா தொற்று அறிகுறிகள் மிதமாக உள்ளவர்கள் தேவையில்லாமல் சி.டி ஸ்கேன் எடுப்பதை தவிருங்கள். கொரோனா சிகிச்சையில் சி.டி. ஸ்கேன் மற்றும் பயோ மேக்கஸ் ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்றார். ஒரு முறை சி.டி. ஸ்கேன் எடுப்பது 300 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம் என்று அவர் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை