விவாகரத்து முடிவை அறிவித்த பில் கேட்ஸ் தம்பதி

தினமலர்  தினமலர்
விவாகரத்து முடிவை அறிவித்த பில் கேட்ஸ் தம்பதி

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா, 27 ஆண்டு திருமண வாழ்விற்கு பின் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.

உலகின் செல்வந்த ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதி தங்களது விவாகரத்து முடிவை டுவிட்டரில் அறிவித்துள்ளனர். விவாகரத்து முடிவை அறிவித்தாலும் உலகளாவிய சுகாதாரம், பாலின சமத்துவம், கல்வி மற்றும் பிற காரணங்களுக்கான திட்டங்களுக்கு நிதியளிக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் தங்கள் கூட்டுப் பணிகளைத் தொடரப் போவதாகக் தெரிவித்துள்ளனர்.


65 வயதான பில்கேடஸ் உலகின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார். அதன் 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகினார். பில் கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் உலகமெங்கும் தொண்டு செய்து வந்தார். 56 வயதான மெலிண்டா கேட்ஸ் 1987-ம் ஆண்டு பில் கேட்ஸை சந்தித்தார். இவர்கள் இருவரும் 1994-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா பெயரில் அறக்கட்டளை நிறுவி பல தொண்டு சேவைகளுக்காக நிதியளித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.


இது தொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான உதவிகளை செய்து வந்துள்ளோம். இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை' எனத் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை