கோப்பை வென்றது இலங்கை | மே 03, 2021

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது இலங்கை | மே 03, 2021

பல்லேகெலே: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் 209 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 1–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

இலங்கை சென்ற வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் பல்லேகெலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 493/7 (‘டிக்ளேர்’), வங்கதேசம் 251 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 194/9 (‘டிக்ளேர்’) ரன் எடுத்தது. பின், 437 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்திருந்தது. லிட்டன் தாஸ் (14), மெஹிதி ஹசன் மிராஸ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு பிரவீண் ஜெயவிக்ரமா தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ லிட்டன் தாஸ் (17), மெஹிதி ஹசன் மிராஸ் (39), அபு ஜெயத் (0) சிக்கினர். தைஜுஸ் இஸ்லாம் (2), டாஸ்கின் அகமது (7) ஏமாற்றினர். இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி 227 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் ஜெயவிக்ரமா 5, ரமேஷ் மெண்டீஸ் 4 விக்கெட் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகன் விருதை ஜெயவிக்ரமா, தொடர் நாயகன் விருதை திமுத் கருணாரத்னே கைப்பற்றினர்.

மூலக்கதை