இந்திய அணி ‘நம்பர்–2’: ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ தரவரிசையில்... | மே 03, 2021

தினமலர்  தினமலர்
இந்திய அணி ‘நம்பர்–2’: ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ தரவரிசையில்... | மே 03, 2021

துபாய்: ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர்–2’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் ‘டுவென்டி–20’ அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 272 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி (277 புள்ளி) ‘நம்பர்–1’ இடத்தில் தொடர்கிறது.

விண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி, 263 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறியது. நான்காவது, 5வது இடத்தில் முறையே பாகிஸ்தான் (261), ஆஸ்திரேலியா (258) அணிகள் உள்ளன. இலங்கை (227 புள்ளி, 8வது இடம்), வங்கதேச (225 புள்ளி, 9வது இடம்) அணிகள் தலா ஒரு இடம் முன்னேறின.

இந்தியா பின்னடைவு: ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி, 115 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி (118 புள்ளி) 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் நியூசிலாந்து (121) தொடர்கிறது.

டெஸ்ட் போட்டி அணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசை பட்டியல், பாகிஸ்தான்–ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தொடருக்கு பின் வெளியிடப்படும்.

மூலக்கதை