கொரோனா பிடியில் ஐ.பி.எல்., * சிக்கலில் சென்னை அணி | மே 03, 2021

தினமலர்  தினமலர்
கொரோனா பிடியில் ஐ.பி.எல்., * சிக்கலில் சென்னை அணி | மே 03, 2021

ஆமதாபாத்: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் கோல்கட்டா வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப், சென்னை அணி பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி உட்பட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கோல்கட்டா–பெங்களூரு போட்டி நேற்று ரத்து செய்யப்பட்டது. வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் ஐ.பி.எல்., தொடர் புதிய சிக்கலில் உள்ளது. 

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளன. இரண்டாவது கட்ட போட்டிகள் நடக்கின்றன. தற்போது கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை என்பதற்குப் பதிலாக, வீரர்களிடம் இரு நாட்களுக்கு ஒரு முறை கோரோனா சோதனை நடத்தப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக கோல்கட்டா வீரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியார் என இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இருவரும் மருத்துவ வசதியுடன் தனிமைப்படுத்தப்பட்டனர். சமீபத்தில் தோள்பட்டை காயம் குறித்து ‘ஸ்கேன்’ செய்ய, வருண் சக்ரவர்த்தி, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டுவெளியே சென்றார். அப்போது இவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இருவர் தவிர மற்ற வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை எனத் தெரியவந்தது. 

இருப்பினும் வேறு யாருக்கும் பாதிப்பு உள்ளதாக என்பதை கண்டறிய, மற்ற கோல்கட்டா வீரர்களுக்கு தினசரி சோதனை நடத்தப்படுகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு வீரர்கள் தங்கள் அறைகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். 

போட்டி ரத்து

ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனில் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் உள்ள வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது இது தான் முதன் முறை. இதையடுத்து நேற்று நடக்க இருந்த கோல்கட்டா–பெங்களூரு மோதல் வேறு தேதிக்கு மாற்றப்பட்டது. 

சிக்கலில் சென்னை

டில்லியில் உள்ள சென்னை அணி தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, பஸ் உதவியாளர் (‘கிளீனர்’) என மூவருக்கு கொரோனா என முதல் கட்ட சோதனையில் தெரிந்தது. பிறகு நடந்த சோதனையில் பாலாஜி, ‘கிளீனர்’ என இருவருக்கும் மட்டும் உறுதியானது. 

 

ஆறு வீரர்கள்

ஐ.பி.எல்., தொடரில் முதன் முதலில் டில்லி வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா ஏற்பட்டது. அடுத்து நிதிஷ் ராணா (கோல்கட்டா), தேவ்தத் படிக்கல், டேனியல் சாம்ஸ் (பெங்களூரு), தற்போது வருண் சக்ரவர்த்தி, சந்தீப் என இதுவரை 6 வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. 

 

தொடரும் அச்சம்

கோல்கட்டா அணி கடைசியாக ஏப். 29ல் டில்லி அணிக்கு எதிராக விளையாடியது. இதனால் டில்லி வீரர்களுக்கும் கோரோனா சோதனை நடத்தப்பட உள்ளது.

* சென்னை அணி, கடைசியாக மும்பையுடன் மோதியது. இதனால் மும்பை வீரர்களுக்கும் சோதனை தொடரலாம்.

* இன்று மும்பை–ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி டில்லியில் நடக்கவுள்ளது. இதற்கான மைதான பணியாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது, கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

போட்டி நடக்குமா

அணி உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,‘‘தொடரை பாதியில் ரத்து செய்வது என்ற பேச்சிற்கே இடமில்லை. பாதுகாப்பு வளையத்தில் உள்ள வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது, பி.சி.சி.ஐ.,க்கு கூடுதல் சவாலை தந்துள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போட்டிகள் தொடரும்,’’ என்றார்.

மற்றொரு அணி உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,‘‘எத்தனை நாட்களுக்குத் தான் போட்டிகளை நிறுத்தி வைக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி விட்டு போட்டிகளை தொடர்ந்து நடத்துவது தான் சிறந்த வழி. வீரர்களும் விளையாடத் தான் ஆர்வமாக உள்ளனர். இதுகுறித்து பி.சி.சி.ஐ., முடிவு செய்யும்,’’ என்றார்.

 

கிளம்பும் வங்கதேச வீரர்கள் 

ஐ.பி.எல்., தொடரில் பல வீரர்கள் முன்னதாக விலகி வருகின்றனர். டில்லி அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டோக்ஸ் காயத்தால் விலகினர். லிவிஸ்டன், ஆன்ட்ரூ டை, ஆடம் ஜாம்பா தனிப்பட்ட காரணங்களுக்காக கிளம்பினர். 

தற்போது ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர், கோல்கட்டா சுழல் வீரர் சாகிப் அல் ஹசன் முன்னதாக வங்கதேசம் கிளம்ப உள்ளனர். அந்நாட்டில் விதிக்கப்பட்ட புதிய விதிகளின் படி, இந்தியாவில் இருந்து சென்றால் 14 நாள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் விரைவில் நாடு திரும்புவது, அந்த அணிகளுக்கு கூடுதல் சிக்கல் தான்.

மூலக்கதை