இது உங்கள் இடம் : அனைவருக்கும் நன்றி!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம் : அனைவருக்கும் நன்றி!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
கு.அருணாச்சலமூர்த்தி, புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: தமிழக வாக்காளர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதுவரை நடந்து முடிந்த, 15 சட்டசபைத் தேர்தல்களை பொறுத்தவரையில், 2006ம் ஆண்டைத் தவிர மற்ற அனைத்திலும், ஆட்சி அமைக்கும் கட்சிக்கு, தமிழக வாக்காளர்கள் அறுதி பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். கடந்த, 2006 தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான, 118 இடங்களைக் கொடுக்காமல்,தி.மு.க.,வுக்கு, 100க்கும் குறைந்த தொகுதிகளில் வெற்றியை தந்தனர். காங்கிரஸ் ஆதரவுடன், தி.மு.க., வெற்றிகரமாக ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தது.


தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை பொருத்தவரையில், தி.மு.க., பெரும்பான்மை பெற்றுள்ளது. பத்தாண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த, அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக மாறுகிறது. தமிழகத்தை பொருத்தவரையில், தொங்கும் சட்டசபைக்கு வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்த, வாக்காளர்களுக்கு நன்றி. இதனால், எம்.எல்.ஏ.,க்களை விலை பேசும், 'குதிரை' பேரத்திற்கு வாய்ப்பு ஏற்படவில்லை என்ற வகையில் மகிழ்ச்சி அடைவோம்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போகும், தி.மு.க.,வுக்கு வாழ்த்துகள். மக்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகள் நல்லாட்சி தர, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும். ஆட்சியில் அமர்ந்த பின், ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என, பாகுபாடு காட்டாமல், அனைத்து மக்களுக்கும் நன்மை ஏற்படுத்த வேண்டும். மாற்றம் மட்டுமே மாறாதது; இது, அரசியலுக்கும் பொருந்தும். வெற்றி, தோல்வி என்பதும், நிரந்தரமானது இல்லை. ஐந்தாண்டுகள் கழித்து, மீண்டும் மக்கள் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்பதை, ஆளுங்கட்சியினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.


தோல்வி அடைந்தோம் என மனம் தளராமல், தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக, சட்டசபையில், அ.தி.மு.க.,வினர் குரல் கொடுக்க வேண்டும். நிலையான ஆட்சி அமைய ஓட்டளித்த, 72.68 சதவீத வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.

மூலக்கதை