இந்தியாவில் 'பைஸர்' தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு

தினமலர்  தினமலர்
இந்தியாவில் பைஸர் தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு

புதுடில்லி : அமெரிக்காவின், 'பைஸர் - பயோஎன்டெக்' நிறுவனத்தின் தடுப்பூசியை, நம் நாட்டில் பயன்படுத்துவதற்கான அனுமதியை விரைவுபடுத்துவது குறித்து, மத்திய அரசுடன் அந்நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.


அமெரிக்காவைச் சேர்ந்த, பைஸர் - பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து, கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி, அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது.

ஒப்பந்த அடிப்படை


அரசுகளுடனான ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே, பைஸர் தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்படும்' என, அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை, நம் நாட்டின் அவசரகால பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்ய, மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்தது. இதற்கிடையே, இந்திய தடுப்பூசி திட்டத்துக்கு, லாப நோக்கம் இன்றி, தடுப்பூசிகளை வழங்க தயாராக இருப்பதாக, பைஸர் நிறுவனம் அறிவித்தது.

இதையடுத்து, பைஸர் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆல்பர்ட் பவுர்லா கூறியதாவது: அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வதே, கொரோனா தொற்று பரவலுக்கு முடிவு கட்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். துரதிர்ஷ்டவசமாக, பைஸர் தடுப்பூசி இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை. ஆனாலும், பல மாதங்களுக்கு முன்பே, இது தொடர்பாக, இந்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளோம். இந்நிலையில், பைஸர் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான அனுமதியை விரைவுபடுத்துவது குறித்து, அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


இலவசம்


இதற்கிடையே, கொரோனா சிகிச்சைக்காக, பைஸர் நிறுவனம் தயாரித்துள்ள மருந்துகளை, இந்தியாவுக்கு அளித்து உதவ, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதற்காக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள வினியோக நிலையங்களில் இருந்து, 510 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை, இலவசமாக அந்நிறுவனம் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மூலக்கதை