கர்நாடகாவில் சோகம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 கொரோனா நோயாளிகள் பலி

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் சோகம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 கொரோனா நோயாளிகள் பலி

சாம்ராஜ்நகர்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மருத்துவமனையில் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ள பரிதாபம் சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு கதறி அழுதனர். மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தான் இத்தனை பேர் இறந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான சுரேஷ்குமார் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்தார்கள் என்று கூற முடியாது. இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்திடம் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டுள்ளேன். ஞாயிறு காலை தொடங்கி நேற்று காலை வரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது 2 மணி நேரம் மட்டுமே. சம்பவம் குறித்து கலெக்டரை தொடர்பு கொண்டு முதல்வர் எடியூரப்பா கேட்டறிந்தார். அறிக்கை வந்த பிறகு தான் என்ன பிரச்னையால் உயிரிழந்தார்கள் என்று தெரியவரும். 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் மாவட்டத்தில் இருப்பு உள்ளது. ஆனால் சிலிண்டர்கள் இல்லை. இந்த சிலிண்டர்கள் மைசூருவில் இருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இறந்த 24 பேரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து முதல்வர் எடியூரப்பா கூறியதாவது: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து அவர்களுக்குரிய தண்டனையை கிடைக்க செய்வோம். இனி, இதுபோல் சம்பவம் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்க செய்ய வேண்டிய கடமை அமைச்சர்களுக்கு இருக்கிறது என்றார்.* அலட்சியத்தால் நடந்த படுகொலை ராகுல் காந்தி கடும் கண்டனம் 24 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், ‘அவர்கள் மரணமடைந்தார்களா அல்லது கொலை செய்தீர்களா? அரசு இயந்திரம் விழித்தெழுவதற்கு இன்னும் எத்தனை  பாதிப்புகளை விலையாக தர வேண்டும்? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.* மபி.யில் 4 பேர் பலிமத்தியப்பிரதேச மாநிலம் பர்வானி மாவட்ட அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் 30 நிமிடங்கள் தடை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதனை மறுத்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை