முதுகலை நீட் தேர்வு 4 மாதம் ஒத்திவைப்பு இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா பணி: பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
முதுகலை நீட் தேர்வு 4 மாதம் ஒத்திவைப்பு இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா பணி: பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு அதிகளவில் மருத்துவர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், முதுகலை நீட் தேர்வை 4 மாதத்திற்கு ஒத்தி வைப்பது மற்றும் எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்துவது என பல்வேறு முக்கிய முடிவுகளை பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் படுக்கை, மருத்துவ கருவிகள் பற்றாக்குறை நிலவும் நிலையில், சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள், நர்ஸ்கள் ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் உழைப்பதால் நோய் தொற்றுக்கு ஆளாவதுடன், மன நெருக்கடியாலும் அவதிப்படுகின்றனர். தொடர் கொரோனா பணியால் மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே, கொரோனா பணியில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்தது. இதுதொடர்பாக பிரதமர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:* தகுதியான வாய்ந்த மருத்துவர்கள் அதிகளவில் கொரோனா பணியில் ஈடுபடுத்த ஏதுவாக முதுகலை நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை முதுகலை நீட் தேர்வுகள் நடைபெறாது.* எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களையும் கொரோனா பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கப்படுகிறது. இவர்கள், லேசான தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு தொலைத்தொடர்பு வாயிலாக ஆலோசனை வழங்குவது அல்லது கொரோனா நோயாளிகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தலாம்.* பயிற்சி மருத்துவர்களை, பயிற்சியாளர்களின் கண்காணிப்பின் கீழ் கொரோனா பணியில் ஈடுபடுத்தலாம். இதன் மூலம் மருத்துவர்களின் பணிச்சுமை குறையும்.* பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ நர்சிங் படித்த செவிலியர்களை அவர்களது மூத்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் முழு நேர கொரோனா பணியில் ஈடுபட அனுமதிக்கலாம்.* மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களை தடுப்பூசி போடும் பணியிலும் ஈடுபடுத்தலாம்.* இவ்வாறு கொரோனா தடுப்பு பணியில் 100 நாட்கள் பணியாற்றுபவர்களுக்கு மத்திய அரசின் நிரந்தர பணி வாய்ப்பின் போது முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் பிரதமரின் கொரோனா தேசிய சேவை சான்றிதழும் வழங்கப்படும்.* இப்பணியில் ஈடுபடுவர்களுக்கு கொரோனா போரில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கான காப்பீடு பாதுகாப்பும் தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* நைட்ரஜன் ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்திகொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, சில நைட்ரஜன் உற்பத்தி ஆலைகளை ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை 14 நைட்ரஜன் ஆலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை ஆக்சிஜன் ஆலைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. அத்துடன், மேலும் 37 நைட்ரஜன் ஆலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், நைட்ரஜன் ஆலைகளை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றுவது குறித்தும், ஆக்சிஜன் உற்பத்தி செய்து, வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.* ஐரோப்பிய ஆணைய தலைவருடன் பேச்சுபிரதமர் மோடியுடன், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் தொலைப்பேசியில் நேற்று பேசினார். இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலவும் கொரோனா நிலவரம் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். 2ம் அலைக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியமும்  அதன் உறுப்பு நாடுகளும் உடனடியாக உதவியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

மூலக்கதை