தயாரிப்பு துறை வளர்ச்சி ஏப்ரலில் வேகம் குறைந்தது

தினமலர்  தினமலர்
தயாரிப்பு துறை வளர்ச்சி ஏப்ரலில் வேகம் குறைந்தது

புதுடில்லி:பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஏப்ரல் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த ஏப்ரல் மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளது. கொரோனா நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய, ‘ஆர்டர்கள்’ மற்றும் உற்பத்தியின் வளர்ச்சி ஆகியவை குறைந்துவிட்டதால், ஏப்ரலில் வளர்ச்சி விகிதம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.

கடந்த மார்ச் மாதத்தில்,தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, 55.4 புள்ளிகளாக இருந்த நிலையில், ஏப்ரலில், 55.5 புள்ளிகளாக உள்ளது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். இது குறித்து, ஐ.எச்.எஸ்., மார்கிட்டின் பொருளாதார இணை இயக்குனர் பொலியானா டி லிமா கூறியுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்துக்கான முடிவுகள், புதிய ஆர்டர்கள் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் மந்தநிலை இருப்பதை காட்டியுள்ளன.தொற்று அதிகரிப்பதை அடுத்து, ஏற்கனவே நிதி பிரச்னைகளில் உள்ள நிறுவனங்கள், உலகளாவிய விலை அதிகரிப்பின் காரணமாக, தேவைகள் குறைவையும் சந்திக்கக்கூடும்.இவ்வாறு கூறியுள்ளார்.

மூலக்கதை