இந்தியாவுக்கு பயணிக்க இஸ்ரேல் மக்களுக்கு தடை

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு பயணிக்க இஸ்ரேல் மக்களுக்கு தடை

ஜெருசலேம்:கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தியா உள்ளிட்ட, ஏழு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள, தங்கள் நாட்டு மக்களுக்கு, இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரசின் இரண்டாம் அலை வேகமெடுக்கத் துவங்கி உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், இந்தியாவில் இருந்து வருவோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேலிலும், அதுபோன்ற ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு, வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8.38 லட்சத்தை கடந்துள்ளது; பலி எண்ணிக்கை, 6,363 ஆக உள்ளது.

இங்கு, கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் வைத்து, இந்தியாவுக்கு, மக்கள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி, உக்ரைன், பிரேசில், எத்தியோபியா, தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லவும், இஸ்ரேல் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது.

இன்று அமலுக்கு வரும் இந்த தடை, வரும், 16ம் தேதி வரை அமலில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, இந்த ஏழு நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு வரும் மக்கள், இரண்டு வார காலத்திற்கு தனிமையில் இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை