ராகுலுக்கு ‘ஆப்பரேஷன்’ * மருத்துவமனையில் அனுமதி | மே 03, 2021

தினமலர்  தினமலர்
ராகுலுக்கு ‘ஆப்பரேஷன்’ * மருத்துவமனையில் அனுமதி | மே 03, 2021

ஆமதாபாத்: பஞ்சாப் அணி கேப்டன் ராகுலுக்கு ‘குடல்வால் அழற்சிக்கு’ (‘அப்பெண்டிசிடிஸ்’) ஆப்பரேஷன் செய்யப்பட உள்ளது. 

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 29. இந்த சீசனில் 7 போட்டிகளில் 4 அரைசதம் உட்பட 331 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முன்னணியில் இருந்தார். நேற்று டில்லிக்கு எதிராக விளையாட இருந்த நிலையில் திடீரென போட்டியில் இருந்து விலகினார். 

இவர் குறித்து பஞ்சாப் அணி வெளியிட்ட அறிக்கை:

டில்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முதல் நாள் இரவில் ராகுலுக்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்ட போதும் வலி குறையவில்லை. அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் குடல்வால் அழற்சி (‘அப்பெண்டிசிடிஸ்’) இருப்பது உறுதியானது. ஆப்பரேஷன் செய்தால் மட்டுமே இதைச் சரி செய்ய முடியும் என்பதால், ராகுல் உடனடியாக மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது. 

ஆப்பரேஷனுக்கு அடுத்து, ஒரு வாரம் அல்லது 10 நாளுக்குப் பின் மீண்டும் ராகுல் பஞ்சாப் அணிக்கு திரும்புவார் என அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இருப்பினும் இவர் மீதமுள்ள ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்பது சிரமம் தான்.

மூலக்கதை