டில்லி அணி கலக்கல் வெற்றி | மே 03, 2021

தினமலர்  தினமலர்
டில்லி அணி கலக்கல் வெற்றி | மே 03, 2021

ஆமதாபாத்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடக்கும் 14வது ஐ.பி.எல்., தொடரில் நேற்று ஆமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் டில்லி, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட், பீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் ராகுலுக்குப் பதில் மயங்க் அகர்வால் கேப்டனாக களமிறங்கினார்.

பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால், பிரப்சிம்ரன் (12) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெய்ல் 13 ரன் எடுத்தார். ‘டுவென்டி–20’ கிரிக்கெட்டின் ‘நம்பர்–1’ வீரர் டேவிட் மலான், 26 ரன்கள் மட்டும் எடுத்து அணியை கைவிட்டனர். தீபக் ஹூடா (1), ஷாருக்கான் (4), ஜோர்டன் (2) என வரிசையாக கைவிட்ட போதும், மயங்க் அகர்வால் சிக்சர், பவுண்டரி மழை பொழிந்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் (99), ஹர்பிரீத் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா (39), ஸ்டீவ் ஸ்மித் (25), ரிஷாப் பன்ட் (14) உதவினர். ஷிகர் தவான் அரைசதம் அடித்தார். டில்லி அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் (69), ஹெட்மயர் (16) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி பெற்ற ஆறாவது வெற்றி இது. 

மூலக்கதை