பட்லர் சதம்: ராஜஸ்தான் வெற்றி | மே 03, 2021

தினமலர்  தினமலர்
பட்லர் சதம்: ராஜஸ்தான் வெற்றி | மே 03, 2021

புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் பட்லர் சதம் அடித்து கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 55 ரன்னில் ஐதராபாத்தை வென்றது. 

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் தற்போது நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதின. ஐதராபாத் அணியின் புதிய கேப்டன் வில்லியம்சன், ‘டாஸ்’ வென்று பீல்டிங் தேர்வு செய்தார். 

ராஜஸ்தான் அணிக்கு பட்லர், ஜெய்ஸ்வால் (12) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பட்லருடன் கேப்டன் சாம்சன் இணைந்தார். இருவரும் ஐதராபாத் பந்து வீச்சை எளிதாக சமாளித்தனர். 23 ரன்னில் மணிஷ் பாண்டே தயவில் தப்பினார் சாம்சன், கலீல் அகமது, விஜய் சங்கர் பந்துகளில் சிக்சர் அடித்தார். 

மறுபக்கம் தன் பங்கிற்கு வேகமாக ரன்கள் சேர்த்த பட்லர், முகமது நபி வீசிய போட்டியின் 15வது ஓவரில் தலா 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 21 ரன்கள் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்த நிலையில் சாம்சன் (48), அரைசத வாய்ப்பை இழந்து திரும்பினார். விஜய் சங்கர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பட்லர், 56 பந்தில் ஐ.பி.எல்., அரங்கில் முதல் சதம் அடித்தார். 64 பந்தில் 124 ரன்கள் எடுத்த பட்லர், சந்தீப் ‘வேகத்தில்’ வீழ்ந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. மில்லர் (7), ரியான் பாராக் (15) அவுட்டாகாமல் இருந்தனர். 

கடின இலக்கைத் துரத்திய ஐதாரபாத் அணிக்கு மணிஷ் பாண்டே (31), பேர்ஸ்டோவ் (30), வில்லியம்சன் (20) சற்று உதவினர். மற்றவர்கள் ஏமாற்ற ஐதாரபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. ராஜஸ்தானின் கிறிஸ் மோரிஸ், முஸ்தபிஜுர் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

 

124

ராஜஸ்தான் அணியின் பட்லர், ஐ.பி.எல்., அரங்கில் முதல் சதம் (124 ரன்) அடித்தார். இதற்கு முன் 2018ல் சென்னை அணிக்கு எதிராக 95 ரன் எடுத்ததே அதிகம். பீட்டர்சன், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவுக்குப் பின் ஐ.பி.எல்., தொடரில் சதம் அடித்த நான்காவது இங்கிலாந்து வீரர் ஆனார் பட்லர்.

 

மூலக்கதை