ருதுராஜ்-டூபிளெசிஸ் பார்ட்னர்ஷிப் புத்திசாலித்தனமாக இருந்தது: சென்னை கேப்டன் டோனி பேட்டி..!

தமிழ் முரசு  தமிழ் முரசு
ருதுராஜ்டூபிளெசிஸ் பார்ட்னர்ஷிப் புத்திசாலித்தனமாக இருந்தது: சென்னை கேப்டன் டோனி பேட்டி..!

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நேற்று இரவு நடந்த 23வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத்  முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவரில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. அதிகபட்சமாக மணிஷ்பாண்டே 46 பந்தில், 5பவுண்டரி, ஒரு சிக்சருடன் 61 ரன், டேவிட் வார்னர் 57 ரன் (55 பந்து), பேர்ஸ்டோவ் 7 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

வில்லியம்சன் 10 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26, கேதர் ஜாதவ் 12 ரன்னில் (4 பந்து) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சென்னை தரப்பில் லுங்கி என்ஜிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய சென்னை அணியில் ருதுராஜ்- டூபிளெசிஸ் சிறப்பான தொடக்கம் அளித்தனர்.

டூபிளெசிஸ் 32 பந்திலும், ருதுராஜ் 36 பந்திலும் அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டிற்கு 129 ரன் சேர்த்த நிலையில், ருதுராஜ் 75 ரன்னில் (44 பந்து, 12 பவுண்டரி), டூபிளசிஸ்  56 ரன்னில் (38 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தனர்.

பின்னர் வந்த மொயின் அலி 15 ரன்னில் வெளியேறினார். 3 விக்கெட்டையும் ரஷித்கான்தான் கைப்பற்றினார்.

18. 3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்த சென்னை, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ருதுராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

6வது போட்டியில் 5வது வெற்றியை பெற்ற சென்னை 10 புள்ளிகளுடன் பட்டியலில் பெங்களூரை பின்னுக்கு தள்ளி  மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. வெற்றிக்கு பின் சென்னை கேப்டன் டோனி கூறியதாவது: எங்கள் பேட்டிங் செயல்திறன் மிகச்சிறப்பாக இருந்தது.அதற்காக பந்துவீச்சு சிறப்பாக இல்லை என்று அர்த்தம் அல்ல. டெல்லி பிட்ச் வியக்கத்தக்க வகையில் இருந்தது.

பனியின் தாக்கம்  இல்லை. ருதுராஜ்-டூபிளெசிஸ் ஓபனிங் பார்ட்னர்ஷிப் புத்திசாலித்தனமாக இருந்தது.

நான் இதைச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், வீரர்கள் இந்த ஆண்டு அதிக பொறுப்பை ஏற்றுள்ளனர். கடந்த 8-10 ஆண்டுகளில் நாங்கள் நிறைய வீரர்களை மாற்றவில்லை, எனவே எங்கள் அணுகுமுறையை அவர்கள் அறிவார்கள்.

வாய்ப்பு கிடைக்காத வீரர்களையும் நாங்கள் பாராட்டுகிறோம். நம்பிக்கை வைக்க முயற்சி செய்யுங்கள், உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது, ​​அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.   டிரஸ்ஸிங் ரூமை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம்.

இது எளிதான விஷயம் அல்ல.

வரும் போட்டிகளில் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும், என்றார்.

.

மூலக்கதை