கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கி தவித்த போது இந்தியா உதவியது போல் நாங்களும் உதவுவோம்!...அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கி தவித்த போது இந்தியா உதவியது போல் நாங்களும் உதவுவோம்!...அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட்

வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு இந்தியா உதவிகளை அனுப்பியது போல் தேவைப்படும் நேரத்தில் நாங்களும் உதவுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட் செய்துள்ளனர். கொரோனா வைரசின் கோரப்பிடியில் இந்தியா சிக்கித் தவித்து வரும் நிலையில், உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு  ஒருநாள் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது.

கொரோனா பாதிப்புடன் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதனால், நாட்டில் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

 தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்தியாவில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் திரவ ஆக்சிஜன் சப்ளை மற்றும் மருத்துவ வசதிகளை செய்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அவசர மருத்துவ உதவிகள் செய்யப்படவில்லை என்றும், அதனால் இருநாட்டு மக்களிடையே அதிருப்தி கருத்துகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து,  பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. அந்த வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறையும் இந்தியாவுக்கு துணை நிற்போம் எனத் தெரிவித்துள்ளது.



அமெரிக்க வெளியுறவுத்துறை இதுபற்றி கூறுகையில், ‘கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம். இந்தியர்களுக்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம்’ என  தெரிவித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தொற்றுநோயின் ஆரம்பத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா உதவிகளை அனுப்பியது போலவே, இந்தியாவுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவ நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்தே போதிருந்தே கூடுதல் ஒத்துழைப்பு மற்றும் விநியோக விஷயத்தில் இந்திய அரசாங்கத்துடன் அமெரிக்கா நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.

தைரியமாக பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம்.

இந்தியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை