ஆக்சிஜன், தடுப்பூசி தேவை 11 மாநிலங்கள் கோரிக்கை.

தினமலர்  தினமலர்
ஆக்சிஜன், தடுப்பூசி தேவை 11 மாநிலங்கள் கோரிக்கை.

புதுடில்லி: கொரோனா பாதிப்பு அதிகரிக்கும், 11 மாநில சுகாதாரத்துறைச் செயலர்கள், 'ஆக்சிஜன் சிலிண்டர்கள்' மற்றும் தடுப்பூசிகள் அதிகம் வழங்கும்படி, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுடன், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கேரளா உட்பட, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இரண்டாம் அலையாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.இதையடுத்து, வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, மருத்துவ நடவடிக்கைகள் குறித்து, இம்மாநில சுகாதாரத்துறைச் செயலர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா பரவல் அதிகரித்துள்ள, 11 மாநிலங்களும், ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் 'ரெம்டிசிவிர்' மருந்துகள் வினியோகத்தை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.அத்துடன், 'வென்டிலேட்டர்' வசதிகளை மேம்படுத்துவதுடன், கூடுதல் தடுப்பூசி மருந்துகளை வழங்கும்படி கேட்டுஉள்ளனர்.கொரோனா சிகிச்சை மருந்துகளை, கள்ளச்சந்தையில் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும்படி கூறிஉள்ளனர்.மாநில பேரிடர் மீட்பு நிதியில், நடப்பு ஆண்டிற்கான தொகையில், 50 சதவீதத்தை கொரோனா மீட்பு பணிகளுக்கு பயன்படுத்த, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அதேபோல், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஏப்., 1 வரை நிலுவையில் உள்ள தொகையை, கொரோனா தடுப்பிற்கு பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை