நாடு முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலி இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் அடக்கம்: பிரியாவிடை கொடுத்தார் ராணி

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலி இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் அடக்கம்: பிரியாவிடை கொடுத்தார் ராணி

லண்டன்: இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத், ஒரு நிமிட மவுன அஞ்சலிக்கு பிறகு தனது கணவருக்கு இறுதி பிரியாவிடை கொடுத்தார். இளவரசர் பிலிப்பின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.  இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப், உடல்நலக் குறைவினால் கடந்த 9ம் தேதி தனது 99 வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு வின்ஸ்டர் கேஸ்டிலில் உள்ள 15ம் நூற்றாண்டை சேர்ந்த புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, ராணி, இளவரசர் சார்லஸ் உள்ளிட்ட அவரது பிள்ளைகள், இளவரசர் வில்லியம்ஸ், ஹாரி உள்ளிட்ட பேரக்குழந்தைகள், இளவரசர் பிலிப் சகோதரி மகன் என அரச குடும்பத்தினர், உறவினர்கள் 30 மட்டுமே இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.தனது 73 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் எப்போதும் ராணியுடன் காணப்பட்ட இளவரசர் பிலிப், நேற்று பெட்டியில் சடலமாக வைக்கப்பட்டு இருந்தார். அவரது இறுதிச்சடங்கில் குறைந்தளவு உறவினர்களே பங்கேற்ற போதிலும், அது அவரது ராணுவ, பொது வாழ்க்கையை பிரதிபலிப்பதாக மிக நேர்த்தியாக இருந்தது. மாலை 3 மணிக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலிக்கு பிறகு அவரது இறுதி சடங்கு பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது. பின்னர், பாடல் குழுவினர் தேசிய கீதத்தை பாடினர். பிறகு, அங்கிருந்து கல்லறை தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. தனது அன்பு கணவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தார் ராணி எலிசபெத். இளவரசர் பிலிப்புக்கு மவுன அஞ்சலி செலுத்துவதற்கு முன்னரும், பின்னரும் லண்டனில் உள்ள 9 முக்கிய இடங்களில் பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதிச் சடங்கின்போது ராணி மட்டும் தனியாக, சோகத்துடன் அமர்ந்திருந்தார்.

மூலக்கதை