ஷங்கர், கலீல், ரஷித் அபார பந்துவீச்சு சன்ரைசர்சுக்கு 151 ரன் இலக்கு

தினகரன்  தினகரன்
ஷங்கர், கலீல், ரஷித் அபார பந்துவீச்சு சன்ரைசர்சுக்கு 151 ரன் இலக்கு

சென்னை: நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 151 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ரோகித், டி காக் இருவரும் மும்பை இன்னிங்சை தொடங்கினர். புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரிலேயே டி காக் 2 பவுண்டரிகளை விளாசினார். அடுத்து முஜீப் வீசிய 2வது ஓவரில் ரோகித் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை பறக்கவிட்டார். ரோகித் 32 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விஜய் ஷங்கர் பந்துவீச்சில் விராத் சிங்கிடம் பிடிபட்டார். அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் 10 ரன் எடுத்து விஜய் ஷங்கர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்ப, மும்பை 8.3 ஓவரில் 71 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. பொறுப்புடன் விளையாடிய டி காக் 40 ரன் (39 பந்து, 5 பவுண்டரி) எடுத்து முஜீப் பந்துவீச்சில் மாற்று வீரர் சுசித் வசம் பிடிபட்டார். இஷான் கிஷன் 12 ரன் எடுத்து முஜீப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் பிடிபட, ஹர்திக் பாண்டியா 7 ரன் எடுத்து அகமது பந்துவீச்சில் விராத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய போலார்டு, புவனேஷ்வர் வீசிய 20வது ஓவரின் கடைசி 2 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன் குவித்தது. போலார்டு 35 ரன் (22 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), க்ருணல் பாண்டியா 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் விஜய் ஷங்கர், முஜீப் உர் ரகுமான் தலா 2, கலீல் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. கேப்டன் வார்னர், ஜானி பேர்ஸ்டோ இருவரும் துரத்தலை தொடங்கினர்.

மூலக்கதை