பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்: மம்தா மீது மோடி பாய்ச்சல்

தினமலர்  தினமலர்
பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்: மம்தா மீது மோடி பாய்ச்சல்

அசன்சோல்:''பிணத்தை வைத்து, அதிலும் அரசியல் செய்வது, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியின் பழைய பழக்கம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே, நான்கு சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், நேற்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடந்தது. வன்முறைஇதற்கிடையே, அசன்சோலில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நான்காம் கட்டத் தேர்தலின்போது, கூச்பெஹரில் நடந்த வன்முறையில், நான்கு பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்; இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்.இந்த சம்பவத்தை வைத்து, மம்தா பானர்ஜி அரசியல் செய்கிறார்.

துப்பாக்கிச் சூடு நடந்த அன்று, கட்சியின் மாவட்டத் தலைவரை அழைத்து, போராட்டம் நடத்தும்படி, மம்தா கூறியுள்ளார். இது தொடர்பாக, மாவட்டத் தலைவருடன், மம்தா பேசும், 'ஆடியோ' வெளியாகி உள்ளது.பிணத்தை வைத்து அரசியல் நடத்துவது, மம்தாவின் பழைய பழக்கம். கூச்பெஹரில் வன்முறை ஏற்பட்டு, துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

உடனடியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடாமல், முதல்வராக உள்ள மம்தா, அதை வைத்து அரசியல் லாபம் பார்க்க முயற்சிக்கிறார். வளர்ச்சி திட்டப் பணிநான்கு கட்ட தேர்தலிலேயே, திரிணமுல் காங்., உடைந்து விட்டது. தேர்தல் முடியும்போது, மம்தாவும், அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியும் காணாமல் போய்விடுவர்.

மாநில முதல்வர்களுடன் நான் நடத்திய எந்தக் கூட்டத்திலும், மம்தா பானர்ஜி பங்கேற்றது இல்லை. மத்திய அரசின் வளர்ச்சி திட்டப் பணிகள், மேற்கு வங்கத்துக்கு கிடைக்கவிடாமல், மம்தா தடுத்து வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ., புகார்

கூச்பெஹரில் நடந்த வன்முறையின்போது, நான்கு பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டது தொடர்பாக, மம்தா பானர்ஜி பேசியதாக கூறப்படும், 'ஆடியோ' குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம், பா.ஜ., நிர்வாகிகள் மனு கொடுத்தனர். 'நான்கு பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்தும்படி, தன் கட்சி மாவட்ட தலைவரிடம், மம்தா கூறியுள்ளார். இதன் மூலம் மாநிலம் முழுதும் வன்முறை ஏற்படுத்த அவர் துாண்டிவிட்டுள்ளார்' என, புகாரில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைப்பு



முர்ஷிதாபாத் மாவட்டம், ஜாங்கிபுர் தொகுதியின், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரதிப் குமார் நந்தி, 73, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் உயிரிழந்தார். இதையடுத்து, வரும், 26ம் தேதி, இந்த தொகுதிக்கு நடக்கவிருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மூலக்கதை