ரயில் நிலையங்களில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்!

தினமலர்  தினமலர்
ரயில் நிலையங்களில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்!

புதுடில்லி :'ரயில் நிலையங்களுக்கு வருவோர், முக கவசம் அணியாவிட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் எச்சில் துப்பினாலும், தண்டம் உண்டு. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, இந்த அதிரடி நடவடிக்கையை ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல், மற்ற பொது இடங்களிலும் கட்டுப்பாடுகள் அமலாகுமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர், தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ரயில் சேவை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக வதந்தி பரவியது. இதை மறுத்த ரயில்வே நிர்வாகம், 'ரயில் சேவையை ரத்து செய்யும்படி, எந்த மாநில அரசிடம் இருந்தும் எங்களுக்கு கோரிக்கை வரவில்லை. எனவே, தற்போதைய ரயில் சேவை தொடரும்' என, விளக்கம் அளித்தது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ரயில்வே வாரியம் நேற்று சில அறிவிப்புகளை வெளியிட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்தாண்டு மே 11ல், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ரயில்வே அறிவித்த வழிகாட்டல் விதிகளின்படி, ரயில்களில் பயணிப்போரும், ரயில் நிலையத்துக்குள் வருவோரும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். ரயில்கள், ரயில் நிலைய வளாகங்கள் ஆகியவற்றை அசுத்தப்படுத்தும் வகையில், எச்சில் துப்புதல் உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

முக கவசம் அணியாமல் பயணித்தல், ரயில் நிலையத்துக்குள் வருதல், எச்சில் துப்புதல் போன்றவை, அடுத்தவர்கள் உயிருக்கும், பொது சுகாதாரத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். அதனால், முக கவசம் அணியாமல் ரயில்களில் பயணிப்போர், ரயில் நிலையத்துக்கு வருவோருக்கு, ரயில்வே சட்டத்தின் படி, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எச்சில் துப்புதல் உள்ளிட்ட அசுத்த செயல்களில் ஈடுபடுவோருக்கும், கடும் அபராதம் விதிக்கப்படும். வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவுகள், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமலில் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்அதிகரித்தாலும், நாட்டில் பல பகுதிகளிலும், பொது இடங்களிலும், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், மக்கள் சுற்றித் திரிகின்றனர். இது, மத்திய - மாநில அரசுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, ரயில்வே அறிவித்துள்ளது போல், மற்ற பொது இடங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



திரவ ஆக்சிஜன்: ரயில்வே சம்மதம்



கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில், 'ஆக்சிஜன்' எனப்படும், பிராண வாயு முக்கிய பங்கு வகிக்கிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிரா மாநிலம், வைரஸ் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மாநில சுகாதாரத்துறைச் செயலர், ரயில்வே வாரியத்துக்கு எழுதிய கடிதத்தில், 'கொரோனா நோயாளிகளை பாதுகாக்க, திரவ நிலையில் உள்ள மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களை ரயில்களில் ஏற்றி வர அனுமதிக்க வேண்டும்' என, கூறியிருந்தார். இந்நிலையில், ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மஹாராஷ்டிரா அரசின் கோரிக்கையை ஏற்று, கட்டண அடிப்படையில், திரவ ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் செல்ல, கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை