ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு

டெல்லி: ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 4 முதல் 30ம் தேதி வரை கும்பமேளாவுக்கு சென்றவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும். பல்வேறு மாநிலங்களிலுள்ள பக்தர்களும், சாதுக்களும் ரிசிகேஷ் கங்கா உள்ளிட்ட நதிக்கரைகளில் புனிதநீராடுவார்கள். அதன்படி இந்தாண்டு கும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா வரும் 30ஆம் தேதி வரை இது நடைபெறும் என்று கூறப்பட்டது. நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை அதி தீவிரமாக இருப்பதால் ஹரித்துவார் ஹாட்ஸ்பாட்டாக மாறும் என சுகாதாரத் துறையினர் கவலை தெரிவித்திருந்தனர். அவர்கள் நினைத்தைப் போலவே பலருக்கும் அடுத்தடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கும்பமேளாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 48 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. அதிகாரிகளும் போலீஸும் கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றக் கோரியும் பக்தர்கள் அவர்களை மதிக்கவில்லை. கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் முதல் கட்டமாக 2,171 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உச்சக்கட்டமாக கும்பமேளாவை நடத்தும் அமைப்பான மத்திய பிரதேச மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் அந்த அமைப்பு பின்வாங்குவதாக அறிவித்தது. தொடர்ந்து பிரதமர் மோடி மற்ற அமைப்புகளிடமும் கும்பமேளாவை நிறுத்த கோரிக்கை விடுத்தார். இச்சூழலில் பல்வேறு மாநில அரசுகள் கும்பமேளா சென்று வந்தவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன்படி கும்பமேளாவிற்குச் சென்று திரும்பியவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த மக்கள் யாரெல்லாம் கும்பமேளா திருவிழாவுக்கு சென்று வந்துள்ளவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கும்பமேளாவுக்கு சென்று வரும் மக்களுக்கு கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். ஏப்ரல் 4 முதல் 17ம் தேதிவரை கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய டெல்லி மக்கள், தங்கள் விவரங்களை அடுத்த 24 மணிநேரத்துக்குள் டெல்லி அரசின் கரோனா கட்டுப்பாட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல ஏப்ரல் 18 முதல் 30ம் தேதிவரை கும்பமேளாவுக்குச் செல்பவர்களும் தங்கள் விவரங்களை டெல்லியைவிட்டு செல்லும் முன்பாக தனியாக குறிப்பிட வேண்டும். கும்பமேளாவுக்கு சென்றுவந்தவர்களை தீவிரமாகக் கண்காணிக்க இது அரசுக்கு உதவும். மேலும் கும்பமேளாவிலிருந்து திரும்புபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என குஜராத் மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மூலக்கதை