பிஎம் கேர்ஸ் நிதியில் முறைகேடு நடந்ததா? தடுப்பூசி ஏற்றுமதியில் மெகா ஊழல்: மத்திய அரசின் தகவல் அடிப்படையில் ஆர்டிஐ ஆர்வலர் பரபரப்பு குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
பிஎம் கேர்ஸ் நிதியில் முறைகேடு நடந்ததா? தடுப்பூசி ஏற்றுமதியில் மெகா ஊழல்: மத்திய அரசின் தகவல் அடிப்படையில் ஆர்டிஐ ஆர்வலர் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: அண்டை நாடுகளுக்கு மத்திய அரசு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக தகவல் உரிமை சட்ட ஆர்வலர் (ஆர்டிஐ)  பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இதற்காக பிஎம் கேர்ஸ் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதற்கிடையே, மனிதாபிமான அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு அண்டை நாடுகளுக்கும் வழங்கியது. மங்கோலியா, ஓமன், மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை, மாலத்தீவு, மொரீஷியஸ், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான் உட்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தேவைக்கேற்ற தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பப்பட்டது. இதன்படி, 6 கோடி டோஸ் தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவில் 12 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுளளது. இதற்கிடையே, கொரோனா 2வது அலை தீவிரமான நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் தேவைக்கே தடுப்பூசி உற்பத்தி செய்யப்படாத நிலையில், மத்திய அரசு வெளிநாடுகளுக்கு எதற்காக ஏற்றுமதி செய்தது என பல தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், தடுப்பூசி ஏற்றுமதியில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக ஆர்டிஐ ஆர்வலர் சாகித் கோகலே என்பவர் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய அரசு எவ்வளவு விலையில் தடுப்பூசிகளை வாங்கி ஏற்றுமதி செய்தது என்பது குறித்து மனு செய்திருந்தார். அதற்கு மத்திய சுகாதாரம் அமைச்சகம் அனுப்பிய பதிலை தனது டிவிட்டரில் இணைத்துள்ளார். அந்த பதிலை வைத்து, கோகலே டிவிட்டரில் எழுப்பியுள்ள கேள்விகள்: ஆரம்பத்தில் மத்திய அரசு கோவிஷீல்டு தடுப்பூசியை விலை ரூ.210 என்ற வீதத்தில் 5.6 கோடி டோஸ்களையும், கோவாக்சின் விலை ரூ.309.75 என்ற வீதத்தில் ஒரு கோடி டோஸ்களையும் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ததாக கூறி உள்ளது. மொத்தம் 6.6 டோஸ் மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் வரை 6 கோடி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதை பிஎம் கேர்ஸ் நிதி மூலம் ரூ.1,486 கோடிக்கு வாங்கப்பட்டதாக அரசு கூறி உள்ளது.  பின்னர், மத்திய சுகாதார பட்ஜெட்டின் மூலம் மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது.  அப்போது கோவாக்சின், கோவிஷீல்டு இரு நிறுவனத்திடம் இருந்தும் தலா ஒரு டோஸ் ரூ.157.50 என்ற விலையில் மட்டுமே வாங்கி உள்ளது. இந்த விலையில் கோவிஷீல்டு 10 கோடி டோசும், கோவாக்சின் 2 கோடி டோசும் வாங்கி உள்ளது. தற்போது வரை நாடு முழுவதும் 12 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இப்போது நமக்கு எழும் கேள்வி என்னவென்றால்,*  பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து எதற்காக அதிக விலைக்கு தடுப்பூசி வாங்கப்பட்டு, அவை அனைத்தும் ஏற்றுமதி செய்யப்பட்டது?* எவ்வளவு விலைக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன?* எதற்காக உள்நாட்டில் விநியோகிப்பதற்கு பதிலாக, வெளிநாட்டிற்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதற்கு ரூ.1,486 கோடி பிஎம் கேர்ஸ் நிதி செலவிடப்பட்டது?* நட்புறவு அடிப்படையில் அரசு ஏற்றுமதி செய்வதானால், அதற்கு ஏன் தனியார் நிதியமான பிஎம் கேர்ஸ் நிதி செலவிடப்பட்டது?* பிஎம் கேர்ஸ் நிதி என்பது பிரதமர் மோடியின் சர்வதேச மக்கள் தொடர்பு நிதியமா?* இந்தியர்கள் அளித்த நன்கொடையான பிஎம் கேர்சில் இருந்து, ஏன் அந்த நிதி இந்தியர்களுக்கு தடுப்பூசி வாங்க பயன்படுத்தப்படவில்லை?*  அதிக நிதி கொடுத்து வாங்கி தடுப்பூசி மூலம் எவ்வளவு மோசடி நடந்துள்ளது? இவ்வாறு சாகித் கோகலே தனது டிவிட்டரில் கேள்விகளை அடுக்கி உள்ளார்.எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! ஏற்றுமதிக்கு பதில் இறக்குமதி‘எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்’ என மறைந்த நடிகர் விவேக் காமெடி டயலாக் போல, கடந்த மாதம் வரை உலகின் மிகப்பெரிய மருந்து ஏற்றுமதி நாடாக இருந்த இந்தியா, பாழாய் போன கொரோனா 2வது அலையால் தற்போது மிகப்பெரிய மருந்து இறக்குமதி நாடாக மாறியிருக்கிறது.  ‘ஆத்மநிர்பார்’ அதாவது தற்சார்பு என குரல் கொடுத்து வந்த மத்திய அரசு, உள்நாட்டில் உற்பத்தியை பெருக்க வழியில்லாமல் வெளிநாடுகளை நாடிச் செல்கிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஏற்கனவே அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டிடம் இருந்து 12.5 கோடி மக்களுக்கு தேவையான தடுப்பூசியை இம்மாதம் இறக்குமதி செய்ய உள்ளது. இதே போல், வெளிநாட்டில் பயன்பாட்டில் உள்ள பைசர், மாடர்னா தடுப்பூசிகளையும் அங்கிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இனி, எந்த வெளிநாட்டிற்கும் தடுப்பூசி வழங்குவதை உறுதியாக சொல்ல முடியாது என மத்திய அரசு கைவிரித்துள்ளது. இதனால், ஆப்ரிக்காவை சேர்ந்த ஏழை நாடுகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஐநா.வின் கோவாக்ஸ் எனப்படும் தடுப்பூசியை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் இந்தியாவைத் தான் பெருமளவில் நம்பியிருந்தது. இப்போது இந்தியாவே திணறுவதால், ஐநா கூட தடுப்பூசியை யாரிடம் கேட்பது என தெரியாமல் தவிக்கிறது.12 கோடி பேருக்கு தடுப்பூசி* நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 11 கோடியே 99 லட்சத்து 37,641 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.* சுகாதாரப் பணியாளர்கள் 91 லட்சத்து 5,429 பேருக்கு முதல் டோசும், 56 லட்சத்து 70,818 பேருக்கு 2 டோசும் போடப்பட்டுள்ளது. * முன்களப் பணியாளர்கள் 1 கோடியே 11 லட்சத்து 44,069 பேருக்கு முதல் டோசும், 54 லட்சத்து 8,572 பேருக்கு 2 டோசும் செலுத்தப்பட்டுள்ளது.* 45-60 வயதுக்கு உட்பட்டவர்களில் 3 கோடியே 92 லட்சத்து 23,975 பேருக்கு முதல் டோசும், 9 லட்சத்து 61,510 பேருக்கு 2 டோசும் செலுத்தப்பட்டுள்ளது. * 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4 கோடியே 49 லட்சத்து 35,011 பேருக்கு முதல் டோசும், 34 லட்சத்து 88,257 பேருக்கு 2 டோசும் போடப்பட்டுள்ளது.எவ்வளவு நாள் பாதுகாப்பளிக்கும்தற்போதைய தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்திக் கொண்ட பிறகு எவ்வளவு நாள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்பதை ஆய்வாளர்களால் இன்னும் உறுதிபடக் கூற முடியவில்லை. 2 டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு சுமார் 6 மாதங்கள் வரை அதற்கான பலன் கிடைக்கும் என தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் கூறி உள்ளன. எனவே அதற்கு பூஸ்டர் போட்டுக் கொள்ள வேண்டுமென கூறியுள்ளன. அடுத்த ஆண்டுக்குள், ஆண்டுதோறும் ஒரே ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் அவரவர் தடுப்பூசியை மேம்படுத்தி விடுவதாகவும் கூறுகின்றனர்.

மூலக்கதை