2 டோஸ் போட்டால் மட்டும் போதாது ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போடணும்: மருந்து நிறுவனங்கள் புதுகுண்டு

தினகரன்  தினகரன்
2 டோஸ் போட்டால் மட்டும் போதாது ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போடணும்: மருந்து நிறுவனங்கள் புதுகுண்டு

புதுடெல்லி:  புத்தாண்டோடு கொரோனா ஒழிந்து விட்டது என எண்ணி நிலையில், 2வது அலை வீசி மக்களை கொத்து கொத்தாக பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. எப்படியோ தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தட்டுத்தடுமாறி 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடைத்து விடும் என எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், ‘இதெல்லாம் பத்தாது. இன்னும் இருக்கு’ என புது குண்டை போட்டுள்ளன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள். அமெரிக்காவின் மருந்து தயாரிக்கும் பைசர் நிறுவனத்தின் சிஇஓ ஆல்பர்ட் போர்லா அளித்த பேட்டியில், ‘‘போலியோ போன்ற தடுப்பூசிகளுக்கு ஒரு டோஸ் மட்டுமே போதுமானது. ஆனால் பருவகால வைரஸ் காய்ச்சலுக்கு ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போட்டே ஆக வேண்டும். அதுபோன்றதுதான் இந்த கொரோனா வைரசும். எனவே, 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் அடுத்த 6 மாதம் முதல் ஓராண்டுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும். அதோடு, ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி அவசியமாகக் கூடும்’’ என கூறி உள்ளார்.இவர் மட்டுமல்ல மற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் பூஸ்டர் தடுப்பூசியை தயாரிப்பில் மும்முரமாக உள்ளன. அமெரிக்காவின் மற்றொரு தடுப்பூசி நிறுவனமான மாடர்னாவும், தனது பூஸ்டர் தடுப்பூசியை உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறி உள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது ஒற்றை டோஸ் தடுப்பூசி ஆண்டுதோறும் போட்டுக் கொள்ள வேண்டுமென கூறி உள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனமும் கோவாக்சினின் பூஸ்டர் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.இது மட்டுமின்றி, உருமாற்ற வைரஸ்களும் பிரச்னையாக உள்ளன. அமெரிக்க அதிபர் பிடேன் அரசு நிர்வாகத்தின் கொரோனா தடுப்பூசி பிரிவு தலைவர் டேவிட் கெஸ்லர் கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டாலும், உருமாற்ற வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பை பெற இன்னும் வலுவான செயல்திறன் கொண்ட தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. எனவே உருமாற்ற வைரஸ்களையும் எதிர்க்கக் கூடிய வல்லமை கொண்ட அடுத்த தலைமுறை தடுப்பூசிகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என கூறி உள்ளார்.  எனவே, கொரோனா தடுப்பூசி தற்போதுள்ள 2 டோஸ்களோடு முடியப் போவதில்லை என்பது மட்டும் தற்போது நிச்சயமாகி உள்ளது.

மூலக்கதை