கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை: அடுக்குமாடி வீட்டில் தூக்கில் தொங்கினார்

தினகரன்  தினகரன்
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை: அடுக்குமாடி வீட்டில் தூக்கில் தொங்கினார்

பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகள் வழி பேத்தி டாக்டர்  சவுந்தர்யா (30) பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டத பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் 2வது மகள் பத்மா. இவரின் கணவர் சிவகுமார். இவர்களின் மகள் டாக்டர் சவுந்தர்யாவுக்கும் (30), டாக்டர் நீராஜிக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில்  பணியாற்றி வந்தனர். இவர்கள் பெங்களூரு வசந்த நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்ைத  உள்ளது. இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு நீராஜ் பணிக்கு  சென்று விட்டார். வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சவுந்தர்யாவுக்கு  காலை உணவு கொடுப்பதற்காக அவர் தங்கி இருந்த அறையின் கதவு தட்டியபோது எந்த பதிலும் வரவில்லை. உடனே, நீராஜிக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். அவர் அவசர அவசரமாக வந்து காலை 10.30 மணிக்கு கதவு தட்டியும் எந்த பயனுமில்லை.  கதவை உடைத்து பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு சவுந்தர்யா சடலமாக தொங்கினார். இது குறித்து ஐகிரவுண்ட் ேபாலீஸ் நிலையத்திற்கு நீராஜ் தகவல்  கொடுத்தார். போலீசார் வந்து சவுந்தர்யாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சவுந்தர்யாவின் கழுத்தில் மட்டும் சிறிய காயம் இருப்பதாகவும், வேறு எந்த இடத்திலும் காயம் உள்பட எந்த அடையாளமும் இல்லை என்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர் சதீஷ் தெரிவித்தார். பின்னர். பெங்களூரு வடக்கு தாலுகா, அப்பிகெரேவில் உள்ள நீராஜ் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. மாலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சவுந்தர்யாவின் உடலை பார்த்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா கண்ணீர் விட்டு கதறி அழுதார். சவுந்தர்யா எதற்காக  கை குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. இந்த தற்்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.

மூலக்கதை