சொத்து மதிப்பு ரூ.4,847 கோடி: நாட்டின் மிகப்பெரிய பணக்கார கட்சி பாஜ

தினகரன்  தினகரன்
சொத்து மதிப்பு ரூ.4,847 கோடி: நாட்டின் மிகப்பெரிய பணக்கார கட்சி பாஜ

புதுடெல்லி: நாட்டிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட கட்சிகளில் ரூ4,847.78 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் பாஜ முதலிடம் பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் செலவுகளுக்காக நிறுவனங்கள், பொதுமக்களிடம் நிதி வசூலித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தேர்தல் பத்திரம், காசோலை மூலமாக நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் அரசியல் கட்சிகள் ஏராளமான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளன. இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அனைத்துக் கட்சிகளுடைய சொத்து விவரங்களை தணிக்கை செய்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் 7 தேசிய கட்சிகள், 44 மாநிலக் கட்சிகளின் 2019-20ம் நிதியாண்டுக்கான சொத்து மதிப்பு முறையே ரூ6,988.57 மற்றும் ரூ2,129.38 கோடியாக உள்ளது. இதில் பாஜ ரூ4,847.78 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. இது மொத்த தேசிய கட்சிகளின் சொத்துக்களில் 69.37 சதவீதமாகும். இதையடுத்து, ரூ698.33 கோடியுடன் அதாவது 9.99 சதவீதத்துடன் 2வது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், 8.42 சதவீதத்துடன் ரூ588.16 கோடி சொத்து மதிப்புடன் காங்கிரஸ் 3வது இடத்திலும் உள்ளன. அனைத்து மாநில கட்சிகளில் முதலிடத்தில் உள்ள 10 கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ2,028.715 கோடியாக அதாவது 95.27 சதவீதத்துடன் உள்ளது. இதில் சமாஜ்வாடி ரூ563.47 (26.46%), தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ரூ310.47, அதிமுக ரூ267.61 கோடியுடன் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.இதே போல், திமுக ரூ162.425 கோடி, சிவசேனா ரூ148.46 கோடி, பிஜூ ஜனதா தளம் ரூ118.425 கோடியுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.  மேலும், 44 கட்சிகளின் மொத்த கடன் மற்றும் நிலுவை தொகை ரூ134.93 கோடியாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை