சித்தூர் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் தேர் சக்கரங்கள் தீ வைத்து எரிப்பு

தினகரன்  தினகரன்
சித்தூர் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் தேர் சக்கரங்கள் தீ வைத்து எரிப்பு

சித்தூர்: சித்தூர் அருகே பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் பழமை வாய்ந்த தேரின் சக்கரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பின்புறம் இருந்த மிகவும் பழமை வாய்ந்த தேர் சக்கரங்களை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் தீ வைத்து கொளுத்தி உள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷூக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, கோயில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, ரதத்தின் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமாகி இருந்தன. இது குறித்து கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் காணிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பாஜ மாநில செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் தலைமையில் அக்கட்சியினர் தேரின் பாகங்கள் தீயிட்டு கொளுத்திய பகுதிக்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பேசிய பானு பிரகாஷ், ‘‘ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் பொறுப்பேற்ற பிறகு, கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகமாகி உள்ளது. இதுவரை பல கோயில்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் உள்ளது. இந்த தேர் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் இல்லை. இதனால், தேரின் சக்கரங்களை கோயில் பின்புறத்தில் போட்டுள்ளனர். இதனை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன. இவற்றுக்கு பொறுப்பேற்று அறநிலையத்துறை அமைச்சர் வெள்ளம்பள்ளி சீனிவாஸ் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்,’’ என்றார்.வேண்டுமென்றே தீ வைக்கவில்லைகாணிப்பாக்கம் விநாயகர் கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ‘‘தேரின்  உதிரிபாகங்கள் பாழடைந்ததால் கோயில் பின்புறத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும்  மேலாக இருந்தது. மர்ம நபர்கள் யாரோ புகை பிடித்து போட்டதில் தீ  ஏற்பட்டுள்ளது. மர்மநபர்கள் யாரும் வேண்டுமென்றே தீ வைக்கவில்லை,’’ என்றார்.

மூலக்கதை