கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை ஊர்வலம் அழைத்து சென்ற குடும்பம்: டெல்லியில் கொடூரம்..!

தினகரன்  தினகரன்
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை ஊர்வலம் அழைத்து சென்ற குடும்பம்: டெல்லியில் கொடூரம்..!

டெல்லி: டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு, பெண்கள் சிலரே செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கஸ்துரிபா நகரில் 21 வயதுடைய திருமணமான பெண்ணை, ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடத்தி சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தலை முடியை வெட்டி, கருப்பு சாயத்தை ஊற்றி, செருப்பு மாலை அணிவித்து, பொதுவெளியில் ஊர்வலமாகவும் அழைத்து சென்றுள்ளனர். இந்த கொடூர சம்பவங்கள் அனைத்தையும் நேரில் பார்த்தவர்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்து அங்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அழைத்து சென்றனர். இந்த கொடூர சம்பவத்தை செய்த அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்புவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில், 7 பேர் பெண்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் யார்?..சம்பந்தப்பட்ட பெண்ணை இளைஞர் ஒருவர் சில நாட்களாக பின்தொடர்ந்துள்ளார். இதனிடையே இளைஞர் திடீரென உயிரிழந்ததால், அவரது மரணத்திற்கும், இந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, இளைஞரின் குடும்பத்தினர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.

மூலக்கதை