'தூண்டிலில் மீன் சிக்கியுள்ளது...' சக வீரரிடம் தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் சொன்ன ரகசியம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தூண்டிலில் மீன் சிக்கியுள்ளது... சக வீரரிடம் தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் சொன்ன ரகசியம்!

சிட்னி: வெற்றி பெற்றேயாக வேண்டும் என்று அதையே சிந்தித்துக்கொண்டு, மனதை தயார்படுத்தி வைத்திருந்தோம் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் டி வில்லியர்ஸ் கூறினார்.

இலங்கையுடனான வெற்றிக்கு பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் டி வில்லியர்ஸ் கூறியதாவது: நாக்அவுட் சுற்றுகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதில்லை என்ற அவப்பெயர் இருந்து வந்தது.

இதை மாற்றி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டுமே நாங்கள் குறிக்கோளாக கொண்டிருந்தோம். வெற்றி என்பதை மட்டுமே எங்கள் மனதில் திரும்ப திரும்ப சிந்தித்து எங்களை தயார்படுத்தினோம்.

அணி வீரர்கள் ஆடிய விதம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உலக கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. டி காக் சிறப்பாக ஆடவில்லை என்று விமர்சனங்கள் வந்தபோதும், அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்தது. தன்மீது வைத்த நம்பிக்கையை டி காக் காப்பாற்றி விட்டார்.

பெரிய நிகழ்வுகளின்போது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு. இப்போட்டியிலும் வெற்றி பெறுவோம் என்று நம்பிதான் களத்திற்குள் வந்தேன். அந்த நம்பிக்கை மட்டுமில்லாவிட்டால் தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்குள் நுழைந்திருக்க முடியாது.

போட்டி முடிந்ததும், சற்று முன்பு மோர்னே மோர்கலிடம் (வேகப்பந்து வீச்சாளர்) நமது தூண்டிலில் ஒரு மீன் சிக்கியுள்ளது. இனிதான் நாம் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினேன். இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறினார். இலங்கை வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், கடின உழைப்பை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதைத்தான் டி வில்லியர்ஸ் இப்படி கூறியுள்ளாராம்.

மூலக்கதை