எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் மார்ச் 31ல் பட்டியலிடப்படும்

தினமலர்  தினமலர்
எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் மார்ச் 31ல் பட்டியலிடப்படும்

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பங்குகள், மார்ச் 31ம் தேதியன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
பட்டியல்
மேலும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான விண்ணப்பம் குறித்த விஷயங்கள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:எல்.ஐ.சி.,யின் பங்குகள், மார்ச் 31ம் தேதியன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். அதற்கு முன், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான விண்ணப்பம் இறுதி செய்யப்பட்டு, விரைவில் செபிக்கு அனுப்பி வைக்கப்படும்.
எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு விலக்கல் வாயிலாக பெறப்படும் தொகை, நடப்பு நிதியாண்டு கணக்கில் சேர்க்கப்படும். அதற்காகவே, மார்ச் 31ம் தேதிக்குள் பங்கு விலக்கல் நடவடிக்கைகளை முடிக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டுக்கான பங்கு விலக்கல் இலக்கை எட்டுவதற்கு, எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படுவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.நடப்பு நிதியாண்டில், பங்கு விலக்கல் இலக்காக 1.75 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு விலக்கல் வாயிலாக, 1 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
நடவடிக்கை
நடப்பு நிதியாண்டில் இதுவரை 9,330 கோடி ரூபாய் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்த சிறுபான்மை பங்குகளை விற்றதன் வாயிலாக திரட்டப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய நிதியாண்டில் 32 ஆயிரத்து 835 கோடி ரூபாய், பங்கு விலக்கல் நடவடிக்கை வாயிலாக திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை