வெளிப்படையான லாபமே நிறுவனத்தை தக்க வைக்கும்

தினமலர்  தினமலர்
வெளிப்படையான லாபமே நிறுவனத்தை தக்க வைக்கும்

மும்பை:ஒரு நிறுவனத்தின் அதிக மதிப்பை விட, வெளிப்படையாக தெரியும் லாபமே, அந்நிறுவனத்தை வெற்றிகரமானதாகவும், நிலைத்திருக்க கூடியதாகவும் உருவாக்கும் என, குமார் மங்கலம் பிர்லா கூறியுள்ளார்.
பெரிய லாபங்களை காட்டாவிட்டாலும், ‘ஸொமாட்டோ, பேடிம்’ போன்ற நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து அதிக நிதியை திரட்டி, அதிக மதிப்பீட்டின் பலன்களை அனுபவிப்பதாக கூறப்படும் பின்னணியில், பிர்லா இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 3.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, ‘ஆதித்ய பிர்லா’ குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லா கூறியதாவது:என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால், பணப்புழக்கம் மற்றும் மொத்த மார்ஜின் போன்ற நம்பகமான பழைய கருத்துக்கள், ஒரு நிறுவனத்தின் நடத்தை மற்றும் செயல்களுக்கு வழிகாட்டுவதாக இருக்கும்.
சில கட்டத்தில், நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் அதிக விலை கொண்டிருக்கிறதா அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை அறிய உதவும், ‘யுனிட் பொருளாதாரம்’ முக்கியமானதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை