ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் ரூ.7,500 கோடி முதலீடு

தினமலர்  தினமலர்
ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் ரூ.7,500 கோடி முதலீடு

புதுடில்லி:‘பார்தி ஏர்டெல்’ நிறுவனத்தில், அமெரிக்க இணைய நிறுவனமான ‘கூகுள்’ 7,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டு களில் மேற்கொள்ளவிருக்கும் பல்வேறு திட்டங்களுக்காக, இந்த முதலீட்டை கூகுள் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
5,250 கோடி ரூபாய்
மேலும், ஏர்டெல் நிறுவனத்தின் 1.28 சதவீத பங்குகளை பெறும் வகையில், ஒரு பங்கின் விலை 734 ரூபாய் என்ற கணக்கில், 5,250 கோடி ரூபாய் அளவுக்கு பங்கு முதலீட்டையும் மேற்கொண்டிருக்கிறது கூகுள்.இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நிதியில் ஒரு பகுதியாக, இந்த முதலீட்டை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில், இந்தியாவை டிஜிட்டல்மயமாக்க 75 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் பிச்சையின் இந்த அறிவிப்பை அடுத்து, முதலில் ‘ஜியோ பிளாட்பார்ம்’ நிறுவனத்தில், 33 ஆயிரத்து 750 கோடி ரூபாயை கூகுள் முதலீடு செய்தது.
ஒப்பந்தம்
தற்போது ஏர்டெல் நிறுவனத்தில் மேற்கொள்ளும் மொத்த முதலீட்டில், 2,250 கோடி ரூபாய் வணிக ஒப்பந்தங்களை அமல்படுத்த பயன்படுத்தப்படும். ‘புதுமையான தயாரிப்புகள் வாயிலாக இந்தியாவை டிஜிட்டல்மயமாக்கும் முயற்சியை ஏர்டெல் மற்றும் கூகுள் மேற்கொள்ளும். ‘இதற்கான தங்களுடைய தொலைநோக்கு பார்வையை இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ளும்’ என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர், சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

இந்த முதலீடு குறித்து சுந்தர் பிச்சை, ‘கூகுள் பங்கு முதலீடு, இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் அதிகம் பேருக்கு கிடைக்கவும்; இணைப்புகளை மேம்படுத்தவும்; நிறுவனங்கள் டிஜிட்டலுக்கு மாறுவதற்கும் உதவும்’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை