ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் * 8 ஆண்டுக்குப் பின் தேர்வு | ஜனவரி 27, 2022

தினமலர்  தினமலர்
ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் * 8 ஆண்டுக்குப் பின் தேர்வு | ஜனவரி 27, 2022

ஹாங்சு: ஆசிய விளையாட்டில் 8 ஆண்டுக்குப் பின் மீண்டும் கிரிக்கெட் இடம் பெறுகிறது.

ஆசிய விளையாட்டின் 19வது சீசன் சீனாவின் ஹாங்சு, ஜெஜியாங்கில் வரும் செப். 10 முதல் 25 வரை நடக்கவுள்ளது. இதில் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இந்தியா இதுவரை 139 தங்கம், 178 வெள்ளி, 299 வெண்கலம் வென்றுள்ளது.

ஆசிய அணிகளுடன் முதன் முறையாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஓசியானா நாடுகளை சேர்ந்த 300 க்கும் அதிகமான விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தடகளம், டிரையத்லான், பளுதுாக்குதல், உஷூ, ரோலர் ஸ்கேட்டிங் என 5 விளையாட்டில் பங்கேற்பர்.

மூன்றாவது முறை

ஆசிய விளையாட்டின் பார்வையாளர்களை அதிகரிக்கும் வகையில் ‘டி–20’ வகை இம்முறை கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அனுமதி கொடுத்துள்ளது. தவிர ‘இ–ஸ்போர்ட்ஸ்’, பிரேக் டான்சும் இதில் இடம் பெற்றுள்ளன. 

இதற்கு முன் 2010ல் குவாங்சு, 2014 இன்ச்சான் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் இடம் பெற்றது. இவை எதிலும் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கவில்லை. 2010ல் வங்கதேசம், 2014ல் இலங்கை அணிகள் தங்கம் வென்றன.

மூலக்கதை