உடல்நிலை சரியில்லாதபோதிலும் பலர் தொடர்ந்து பணி செய்கின்றனர்!: 13 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்து உச்சநீதிமன்றம் கவலை..!!

தினகரன்  தினகரன்
உடல்நிலை சரியில்லாதபோதிலும் பலர் தொடர்ந்து பணி செய்கின்றனர்!: 13 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்து உச்சநீதிமன்றம் கவலை..!!

டெல்லி: 13 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை தெரிவித்திருக்கிறார். நீதிபதிகள் பலர் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பணி செய்து வருகின்றனர் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. 2 அலைகளை காட்டிலும் 3வது அலை வேகமெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றால், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், காவலர்கள் மற்றும் நீதிபதிகள் என முக்கியமானவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், உச்சநீதிமன்றத்தில் உள்ள 32 நீதிபதிகளில் கடந்த வாரம் 8 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. அதன்பின்னர் தற்போதைய சூழலில் 13 நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் சிலர் ஓய்வெடுத்து வருகின்றனர். சில நீதிபதிகள் கொரோனா பாதிப்பினால் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அவர்களது அறைகளில் இருந்தே வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பால் நீதிபதிகளின் உடல்நிலை ஒத்துழைக்காத போதிலும் பலர் தங்களது பணிகளை செய்கின்றனர் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் ஏறத்தாழ 1,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்றத்தின் பல்வேறு பணிகள் முடங்கி உள்ளன. உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் விசாரணை நடந்து வரும் நிலையில், நீதிபதிகள் பற்றாக்குறையால் பல்வேறு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை