அடுத்த ஆண்டாவது வருவாரா 'இந்தியன் 2' ?

தினமலர்  தினமலர்
அடுத்த ஆண்டாவது வருவாரா இந்தியன் 2 ?

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'.

மூன்று வருடங்களுக்கு முன்பு 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. அதன்பின் போபால், ஐதராபாத் உள்ளிட்ட சில இடங்களில் நடைபெற்றது. 2020ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது கிரேன் விபத்து ஏற்பட்டு மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு உதவித் தொகையும் அளிக்கப்பட்டது.

இருப்பினும் உடனடியாக படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. அதற்குள் கொரோனா தாக்கம் வந்ததால் படப்பிடிப்பு தாமதமானது. மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்ற நிலையில் ஷங்கர் மீது லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்த பிறகுதான் அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சினை வெளியில் வந்தது. அதன் பின் நடந்த விசாரணை, தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகலாம் என்றார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவேயில்லை.

இதனிடையே, ஷங்கர் தெலுங்குப் படம், ஹிந்திப் படம் என இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார். ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை கடந்த செப்டம்பர் மாதமும் ஆரம்பித்துவிட்டார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இப்படத்தை இயக்கும் வேலைகளில் மட்டுமே ஷங்கர் ஈடுபடுவார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படியென்றால் 'இந்தியன் 2' பட வேலைகள் எப்போது ஆரம்பமாகும் என கோலிவுட்டிலும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தெலுங்குப் படத்தை முடித்த பிறகுதான் ஷங்கர் 'இந்தியன் 2' படத்தை ஆரம்பிக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். அப்போது 'இந்தியன் 2' வின் முந்தைய படப்பிடிப்புகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் மூன்று வருடம் பழையதாக இருக்கும். மூன்று வருட இடைவெளியில் நடிகர்கள், நடிகைகளின் தோற்றத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. அவற்றையெல்லாம் சரி செய்து எடுப்பது சாதாரண விஷயமல்ல.

ஷங்கர், கமல்ஹாசன் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்த 'இந்தியன் 2' படத்தின் நிலைமை இப்படியாகிவிட்டதே என கமல்ஹாசன் ரசிகரகள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களது கவலையை தீர்த்து வைக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை.

மூலக்கதை