கார்த்திக் சுப்பராஜ் படங்கள் அடுத்தடுத்து ஓடிடி-யில்…

தினமலர்  தினமலர்
கார்த்திக் சுப்பராஜ் படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில்…

'பீட்சா' படம் மூலம் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். 2012ல் வெளியான அந்தப் படத்திற்குப் பிறகு 2014ல் அவர் இயக்கிய 'ஜிகர்தன்டா' படமும் பெரிய வரவேற்பைப் பெற்று, இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது. அதன்பின் அவர் இயக்கிய 'இறைவி, மெர்க்குரி' ஆகிய இரண்டு படங்களும் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.

இருப்பினம் 2019ல் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்பராஜுக்குக் கிடைத்தது. அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாகவும் அமைந்தது. ஆனால், கடந்த மூன்று வருடங்களாக கார்த்திக் சுப்பராஜ் பெரிய திரை பக்கம் வராமல் ஓடிடி பக்கமே ஒதுங்கிவிட்டார்.

2020ம் வருடம் ஓடிடியில் வெளிவந்த 'புத்தம் புது காலை' ஆந்தாலஜி, படத்தில் 'மிராக்கிள்' என்ற ஒரு குறும்படத்தையும், 2021ல் வெளிவந்த மற்றொரு ஆந்தாலஜி படமான 'நவரசா'வில் 'பீஸ்' என்ற குறும்படத்தையும் இயக்கினார்.

மேலும், முதல் முறையாக தனுஷுடன் இணைந்த 'ஜகமே தந்திரம்' படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. அடுத்து விக்ரம், அவரது மகன் துருவ் ஆகியோர் நடிக்கும் 'மகான்' படத்தை இயக்க ஆரம்பித்தார் கார்த்திக். குறுகிய காலத்தில் அப்படம் எடுத்து முடிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படமும் அடுத்த மாதம் பிப்ரவரி 10ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து ஓடிடியில் கார்த்திக் சிக்கிக் கொண்டாலும் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கப் போகும் இயக்குனர்களின் பெயர்களில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

மூலக்கதை