பிப்.22க்குள் நில அபகரிப்பு குறித்த அனைத்து வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்: சென்னை ஐகோர்ட் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

தினகரன்  தினகரன்
பிப்.22க்குள் நில அபகரிப்பு குறித்த அனைத்து வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்: சென்னை ஐகோர்ட் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: தமிழகத்தில் நிலஅபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. மேலும் இதுகுறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் 6 வாரத்தில் பதிலளிக்கவும் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இதேபோன்று தமிழகத்தின் ஈரோடு பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அளித்த நிலமோசடி புகார் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்த நிலையில் மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 14ம் விசாரணைக்கு வந்தபோது  முத்துலட்சுமி தரப்பு வழக்கறிஞர் இளங்கோவன் ,‘நில அபகரிப்பு வழக்குகளை அதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே விசாரிக்க முடியும். தமிழகம் முழுவதும் 36 சிறப்பு நீதிமன்றங்கள் தனித்தனியாக மாவட்ட அளவில் உருவாக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22ம் தேதி  பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பு வாதத்தில், ‘2015ல் இருந்தே நில அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் 785 வழக்குகள் நில அபகரிப்பு நீதிமன்றத்திலும், அதுதொடர்பாக 2848 முதல் தகவல் அறிக்கையும், அதேப்போன்று 483 வழக்குகள் மற்ற நீதிமன்றத்தில், அதுசார்ந்த 42 முதல் தகவல் அரிக்கையும் நிலுவையில் உள்ளது என தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி எம்.ஆர்.ஷா, அனைத்து வழக்குகளையும் ஏன் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவில்லை. உயர்நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க கூடாது என முன்னதாக உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனை மீறி உயர்நீதிமன்றம் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கிறது?, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது? அதன் தற்போதைய நிலவரம் என்ன என பதிவாளருக்கு சரமாரி கேள்வியெழுப்பினர்.இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ண மூர்த்தி, ‘காவல் நிலையத்தில் உள்ள முதல் தகவல் அறிக்கையின் படி விசாரணை நடத்தப்பட்டு வரப்படுகிறது. அனைத்து நில அபகரிப்பு நிலங்களும் தனியார் மற்றும் அரசியல் சார்ந்த வழக்குகளாக உள்ளது.  இது சார்ந்த விசாரணைக்காக அரசு தரப்பில் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வழக்கு விவரங்களையும் காவல் நிலையத்தில் இருந்து சேகரிக்க அவகாசம் வேண்டும்’ என தெரிவித்தார்.இதன் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழகத்தில் நிலுவையில் இருக்கும் அனைத்து நில அபகரிப்பு வழக்குகளையும் பிப்ரவரி 22க்குள் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பதிவாளருக்கு உத்தரவிட்டனர்‘. அதேபோன்று இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் அதுசார்ந்த விளக்கங்களை இரண்டு வாரத்தில் அறிக்கையாக தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை பிப்ரவரி 22க்கு ஒத்திவைப்பதாவும், அன்றைய தினம் இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

மூலக்கதை