எவரெஸ்ட் சிகரம் வென்ற பச்சேந்திரி பால் தலைமையில் 50 பிளஸ் பெண்கள் இமயமலை பயணம்

தினகரன்  தினகரன்
எவரெஸ்ட் சிகரம் வென்ற பச்சேந்திரி பால் தலைமையில் 50 பிளஸ் பெண்கள் இமயமலை பயணம்

ஜம்ஷெட்பூர்: எவரெஸ்ட் சிகரம் வென்ற பச்சேந்திரி பால் தலைமையில் 10 பேர் கொண்ட 50 வயதுக்கு மேற்பட்ட இந்திய மகளிர் குழு இமயமலை சாதனை பயணத்தை மார்ச் 8ம் தேதி தொடங்க இருக்கிறது. டாடா ஸ்டீஸ் அட்வென்ச்சர் பவுண்டேஷன் சார்பில் ‘பிட்@50+ மகளிர் டிரான்ஸ் இமாலயம் எக்ஸ்பிடிசியன் எனும் குழு  மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி இமயமலை பயணம் தொடங்குகிறது. அருணாசல பிரதேசத்தில் இருந்து தொடங்கி லடாக் வரை இவர்களது பயணம்  5 மாதத்தில் 37 மலைகள் மற்றும் கணவாய் வழியாக 4,625 கி.மீ. உயரத்தை அடைகிறது. கடந்த ஆண்டு தொடங்க வேண்டிய இப்பயணம் கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அனைத்து வயதிலும் பெண்கள் தங்கள் உடல்நலத்தை பேணி பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மலை ஏற்ற பயணம் தொடங்குகிறது. இந்த 10 பேர் கொண்ட குழுவை எவரெஸ்ட் சிகரம் வென்ற பச்சேந்திரி பால் வழிநடத்துகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இப்பயணம் தொடங்கும் போது எனக்கு 67 வயது பூர்த்தியாகிறது. இக்குழுவில் எவரெஸ்ட் சிகரம் தொட்ட 3 பேர் இடம்பெற்றுள்ளோம். இல்லத்தரசிகளும், தொழில் வல்லுநர்களும் உள்ளனர். அருணாசலபிரதேசம் பாங்காங் கணவாய் வழியாக பயணம் தொடங்கி கடினமான பாதைகளில் ஒன்றான லம்காகா கணவாயை கடந்து லே-லடாக் பகுதியில் முடிவடையும்.’ இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை