சிறந்த வீராங்கனை மந்தனா: ஐ.சி.சி., தேர்வு | ஜனவரி 24, 2022

தினமலர்  தினமலர்
சிறந்த வீராங்கனை மந்தனா: ஐ.சி.சி., தேர்வு | ஜனவரி 24, 2022

துபாய்: கடந்த ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதை இந்தியாவின் மந்தனா தட்டிச் சென்றார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக இந்திய அணி துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 2021ல் விளையாடிய 22 சர்வதேச போட்டிகளில், ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 855 ரன் (சராசரி 38.86) குவித்தார். இதில், இரண்டு டெஸ்ட் (244 ரன், ஒரு சதம், ஒரு அரைசதம்), 11 ஒருநாள் (352 ரன், 2 அரைசதம்), 9 சர்வதேச ‘டி–20’ (255 ரன், 2 அரைசதம்) போட்டிகள் அடங்கும்.

கடந்த ஆண்டு சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடிய 5 ஒருநாள், 3 ‘டி–20’ என, மொத்தம் 8 போட்டிகளில் இந்தியா 2ல் மட்டும் வெற்றி பெற்றது. இவ்விரு போட்டியிலும் மந்தனாவின் (இரண்டாவது ஒருநாள் போட்டியில் 80* ரன்,  கடைசி ‘டி–20’ போட்டியில் 48* ரன்) செயல்பாடு இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. இதேபோல இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்டில் 78 ரன் எடுத்து ‘டிரா’ செய்ய உதவிய இவர், ஒருநாள் போட்டியில் 49 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். இந்திய அணி, முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது. இதில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்த மந்தனா, போட்டியை ‘டிரா’ செய்ய உதவினார். இதன்மூலம் ஆட்ட நாயகி விருது வென்றார்.

சிறந்த வீரருக்கான விருதை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிதி கைப்பற்றினார். இவர், கடந்த ஆண்டு விளையாடிய 36 சர்வதேச போட்டிகளில், 78 விக்கெட் சாய்த்தார்.

பாபர் ஆசம் தேர்வு: கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரராக பாகிஸ்தானின் பாபர் ஆசம், சிறந்த வீரராக தேர்வானார். இவர், கடந்த ஆண்டு விளையாடிய 6 ஒருநாள் போட்டியில், 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 405 ரன் எடுத்தார். கடந்த ஆண்டின் சிறந்த அம்பயர் விருதை தென் ஆப்ரிக்காவின் மரைஸ் எராஸ்மஸ் தட்டிச் சென்றார்.

மூலக்கதை