நோயெதிர்ப்பு திறன் அதிகரிப்பால் இறுதிகட்டத்தில் தொற்று பரவல்; உலக சுகாதார அதிகாரி தகவல்

தினகரன்  தினகரன்
நோயெதிர்ப்பு திறன் அதிகரிப்பால் இறுதிகட்டத்தில் தொற்று பரவல்; உலக சுகாதார அதிகாரி தகவல்

லண்டன்: கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் சமூக ெதாற்றாக வேகமாக பரவி மூன்றாவது அலையாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் கொரோனா பரவல் முடிவுக்கு வருவதாக சுகாதார நிபுணர்கள் ஆறுதலான செய்தியை வெளியிட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா பிரிவு இயக்குனர் ஹான்ஸ் குளுட்ஜ் கூறுகையில், ‘தொற்று நோய் பரவல் அதன் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கிறது. மார்ச் மாதவாக்கில் 60% ஐரோப்பியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படலாம். ஒமிக்ரான் உச்சநிலை குறையத்தொடங்கிய பின்னர், அடுத்த சில வாரங்கள், மாதங்களுக்கு பரந்த நோயெதிர்ப்பு திறன் மக்களிடையே ஏற்படக்கூடும். இது தடுப்பூசி, காலநிலை மாற்றம் அல்லது நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக இருக்கலாம். இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் வருவதற்கு முன் அமைதியான காலம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால் தொற்றுநோய் மீண்டும் வர வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையும் அவசியம். ஜனவரி 18ம் தேதி கணக்கின்படி ஐரோப்பியாவில் பதிவான புதிய தொற்றுகளில் 15 சதவீத தொற்று ஒமிக்ரான் வைரஸால் ஏற்பட்டவை. தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அரசாங்கங்கள் தொற்றுப் பரவல் தடுப்பில் தீவிரம் காட்டுவது போல மருத்துவமனை தேவைகளை குறைப்பது, பள்ளிகள் செயல்பாடுகள் தடைபடுவதைக் சீர் செய்வது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, சீக்கிரம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மக்களை பாதுகாப்பது ஆகியனவற்றில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.

மூலக்கதை