மின் வாகன துறையில் மியூச்சுவல் பண்ட்கள் ஆர்வம்

தினமலர்  தினமலர்
மின் வாகன துறையில் மியூச்சுவல் பண்ட்கள் ஆர்வம்

வளர்ச்சி வாய்ப்புள்ளதாக கருதப்படும் மின் வாகன துறையை மையமாக கொண்டு, புதிய நிதிகளை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அறிமுகம் செய்ய துவங்கியுள்ளன.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய நிதிகளை அறிமுகம் செய்து வரும் நிலையில், அண்மை காலத்தில் மின் வாகன வளர்ச்சியை மையமாக கொண்டு நிதிகளை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளன. பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்து முதலீடுகளை மேற்கொள்ளும் நிதிகள், ‘திமெட்டிக் பண்ட்ஸ்’ என அறியப்படுகின்றன.

புதிய போக்கு அல்லது வளர்ச்சி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான உத்தியாக இது அமைகிறது. இந்த வகையில் தற்போது மின் வாகன துறையில் மியூச்சுவல் பண்ட்கள் ஆர்வம் காட்டத் துவங்கிஉள்ளன.அண்மையில், மூன்று மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மின் வாகன நிதிகளை அறிமுகம் செய்ய அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப்பித்துள்ளன.

வளர்ச்சி வாய்ப்பு

வாகன துறையில் மின் வாகனங்கள் கவனத்தை ஈர்க்கத் துவங்கியுள்ளன. சுற்றுச்சூழலுக்கு நட்பான தன்மை காரணமாக, மின் வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக கருதப்படுகின்றன. மேலும் மின் வாகனங்கள் செயல்திறனும் அதிகரித்து வருவதால், பலரும் மின் வாகனங்களை நாடத் துவங்கியுள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப் போலவே தற்போது இந்தியாவிலும் மின் வாகனங்கள் வரவேற்பை பெறத் துவங்கியுள்ளன. புதிய நிறுவனங்கள் மின் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருவதோடு, பாரம்பரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களும் மின் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.

இந்நிலையில் மின் வாகன துறையின் வளர்ச்சி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மின் வாகன நிதி திட்டங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன.மின் வாகன நிதிகள் புதுயுக மின் வாகன நிறுவனங்களில் முதலீடு செய்வதோடு, இந்த பிரிவில் உற்பத்தியில் ஈடுபடும் பாரம்பரிய கார் தயாரிப்பு நிறுவனங்களிலும் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மின் வாகனங்களுக்கான ‘பேட்டரி’ தயாரிப்பு, ‘செமிகண்டக்டர்’ தயாரிப்பு போன்ற துணை பொருட்கள் நிறுவனங்களிலும் முதலீடு செய்ய உள்ளன.

முதலீட்டாளர் முடிவு

மின் வாகன துறையில் தொழில்நுட்ப முன்னேற்றமும் வேகமாக ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நுகர்வோரும் மின் வாகனங்களுக்கு மாறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்திய நுகர்வோரிடம் பெரும்பான்மையினர் மின் வாகனங்களுக்கு கூடுதலாக விலை கொடுக்க தயாராக இருப்பதாக அண்மை ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

எனவே, இந்த துறையில் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது. வளர்ச்சி வாய்ப்பின் அம்சங்கள் இப்போதே வலுவாக காணப்படுவதாகவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றம் தொடர்பான பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மின் வாகனங்களுக்கான தேவையும், ஆதரவும் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்த பின்னணியில், மின் வாகன நிதிகள் ஈர்ப்புடைய வாய்ப்பாக தோன்றினாலும், முதலீட்டாளர்கள் இவற்றில் முதலீடு செய்யும் முன், இந்த நிதிகளின் தன்மையை நன்றாக ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர்.மின் வாகன நிதிகளில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள், அவற்றுக்கு அடிப்படையாக அமையும் குறியீடு அல்லது இ.டி.எப்., அமைப்பை பரிசீலிப்பது அவசியம்.

மின் வாகன துறையை கவனித்து வருபவர்கள் மற்றும் இத்துறை போக்குகளில் பரிட்சயம் உள்ளவர்கள், சிறிய அளவில் இந்த நிதிகளில் முதலீட்டை துவங்கலாம் என்கின்றனர். மற்ற முதலீட்டாளர்கள் மின் வாகன துறையின் செயல்பாட்டை நெருங்கி கவனித்து, அதற்கேற்ப முடிவு எடுப்பது பொருத்தமாக இருக்கும்.

மூலக்கதை