மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வட்டி கிடைக்குமா?

தினமலர்  தினமலர்
மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வட்டி கிடைக்குமா?

ஆன்லைனில் பொருள், வெளிநாட்டில் வேலைவாய்ப்பு போன்றவற்றை வழங்குவதாக சொல்லும் பல நிறுவனங்களின் உண்மையான விலாசம், தொடர்பு எண் போன்றவை தெரிவதில்லை; குறைகளுக்காக அணுக முடிவதில்லை. அதுவே இந்திய அரசாங்கத்தில், அந்நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், நிறுவனத்தின் உண்மை தன்மை அறிந்து, பணம் செலுத்த முடியுமே?
சு.இளங்கோவன், திண்டுக்கல்.
ஏற்கனவே அப்படித் தான் இருக்கிறது. ஒரு வணிக தளம், பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பிக்கும் முன்பு, பல்வேறு அரசு பதிவு விபரங்களை உறுதி செய்த பின் தான், வணிகம் செய்யவே அனுமதிக்கப்படும். இங்கே தான் ‘பிராண்டு’ முக்கியத்துவம் பெறுகிறது. பொருட்களை வாங்கும் போது, பிராண்டு அதன் நம்பகத்தன்மை, தரத்தை உறுதி செய்யும். தரமில்லாததாக இருந்தால் பரிகாரம் தேட, நுகர்வோர் குறைதீர் முறைகள் உள்ளன.'
‘வேலைவாய்ப்பு தருகிறேன், பணம் கட்டு’ என்று எந்த விளம்பரம் வந்தாலும் நம்பாதீர்கள். சேரனின் வெற்றிக் கொடி கட்டு படம் ஞாபகம் இருக்கிறதல்லவா?
மூத்த குடிமக்கள், பெண்கள் ஆகியோர் வங்கி வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்தால், கூடுதல் வட்டி தருகின்றனர். என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் கூடுதல் வட்டி கிடைக்க வாய்ப்பு உண்டா?
மகேந்திரன், சென்னை.
இப்போது வரைக்கும் மாற்றுத்திறனாளிகள் கோரும் கடன் வசதிக்கு தான் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், வைப்பு நிதி வட்டி விகிதத்தில் சலுகை ஏதும் இல்லை. இந்திய மக்கள்தொகையில் 2.21 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ள நிலையில், கருணை அடிப்படையில், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் அரை சதவீத கூடுதல் வட்டி, இவர்களுக்கும் வழங்கப்படலாம்.
என் மகன் அமெரிக்காவில் ‘கிரீன் கார்டு’ பெற்றிருப்பவர். அவர் எங்களுக்கு ஏதாவது பணம் அனுப்பினால், அதற்கு வருமான வரி உண்டா? அவர் ஏதாவது வீடு, பிளாட் வாங்குவதற்கு எங்கள் வாயிலாக பணப் பரிவர்த்தனை செய்தால், என்னென்ன சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்? அல்லது நேரடியாகவே விற்பவருக்கு பணம் அனுப்பினால், அதற்கு எப்படி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்?
ரகுநாதன் நாகராஜன், மின்னஞ்சல்.
அவர் உங்களுக்கு அனுப்பும் பணம், ‘பரிசாக’ கருதப்படும் என்பதால், வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை. உங்கள் மகன் கொடுத்த பணம் இனி உங்களுடையது என்பதால், நீங்கள் வீடு வாங்கலாம்.பணம் எப்படி வந்தது, எவ்வளவு வந்தது என்பதற்கான வழிமுறைகளை தெளிவாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை ஒருவேளை வருமான வரித் துறையில் இருந்து கேள்வி எழுந்தால், விளக்கம் சொல்வதற்கு இந்த பரிவர்த்தனை விபரங்கள் பயன்படும்.
வெளிநாட்டு குடிமகனாகிவிட்ட உங்கள் மகன், ஒரு சொத்தை வாங்குவதற்காக, நேரடியாக விற்பவருக்கு பணம் அனுப்ப இயலாது. வாரிசுரிமை அடிப்படையில் மட்டுமே, அவரால் இங்கே இந்தியாவில் சொத்தை பெற முடியும்.
அரசு ஊழியரான என் சம்பள சேமிப்பு கணக்கை, பொதுத் துறை வங்கியில் வைத்திருக்கிறேன். மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி அதிகமாக யு.பி.ஐ., செயலிகளில் பரிவர்த்தனைகளை செய்து கொண்டிருக்கிறேன். பாஸ்புக்கை புதுப்பித்து தரும்படி மேலாளரிடம் கேட்டபோது, ‘நீங்கள் யு.பி.ஐ., செயலிகளில் அதிகமாக பரிவர்த்தனை செய்துள்ளதால், உங்களுக்கு பாஸ்புக் புதுப்பித்து தர இயலாது’ என்றும், ‘சேமிப்பு கணக்கில் நான்கு முறை தான் பரிவர்த்தனை செய்ய வேண்டும், அதிகமாக வேண்டுமென்றால், நடப்புக் கணக்காக மாற்றி கொள்ளுங்கள். நீங்கள் செய்தவை அனுமதிக்கப்படாத பரிவர்த்தனை’ என்றும் கூறுகிறார்; இது சரியா? புகார் கொடுக்கலாமா?
சரவணன், போடிநாயக்கனுார்.
அவர் புத்திசாலி! நடப்புக் கணக்கை ஆரம்பிக்க வைத்து, வங்கிக்கு வருமானம் சேர்க்கிறார் போலிருக்கிறது. நடப்புக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் இலவச பரிவர்த்தனைகளுக்கு பின்னர் வழங்கப்படும் சேவைகளுக்கான பல்வேறு கட்டணங்கள், கண்ணைக் கட்டுகின்றன. இணையத்தை நன்கு பயன்படுத்த தெரிந்த உங்களுக்கு எதற்கு பாஸ்புக்? தேவைப்பட்டால், உங்கள் வங்கி வலைதளத்தில் இருந்து ஸ்டேட்மென்டை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த மேலாளரை பற்றி, அந்த வங்கியின் மனிதவளத் துறைக்கு புகார் அனுப்புங்கள். குறைந்த பட்சம், வாடிக்கையாளர்களை பயமுறுத்தக் கூடாது என்பதையாவது மேலதிகாரிகள் இவருக்கு சொல்லக்கூடும்.
தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வருமான வரி செலுத்தியவர், ஒருவேளை சாலை விபத்தில் மரணம் அடைந்தால், வருமான வரித் துறையில் இருந்து, 10 மடங்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என்கின்றனரே; அதை எப்படி பெறுவது?
ஆர்.அழகர்சாமி,திண்டுக்கல்,
‘வாட்ஸ் ஆப்’ பல்கலைக் கழகத்தில் பிறந்த அக்மார்க் பொய் இது! மோட்டார் வாகன சட்டப் பிரிவு 166, உச்ச நீதிமன்ற தீர்ப்பு எண் என்றெல்லாம் பயங்கர புரூடா அம்சங்களோடு, நம்புவது போலவே உற்பத்தி செய்யப்பட்ட செய்தி இது; நம்பாதீர்கள். மோட்டார் வாகனச் சட்டமோ, உச்ச நீதிமன்ற தீர்ப்போ இப்படிச் சொல்லவில்லை.
பி.எப்., பணம் பெறுவதில் சிக்கலாக உள்ளது. என் விபரங்களை இணையத்தில் பதிவிட்டு, யு.ஏ.என்., கணக்கு எண்ணை உருவாக்க வேண்டுமாம். என் நிறுவன உரிமையாளர் நான்கு ஆண்டுகளாக இதை செய்து தராமல் காலம் கடத்துகிறார்; நான் என்ன செய்வது? பி.எப்., பணம் பெற வேறு ஏதேனும் வழிகள் உள்ளதா?
சி.நிஷா, சென்னை.
யு.ஏ.என்., எண்ணை பணியாளர்களே உருவாக்கிக் கொள்ளும் வசதி வந்த பின்னர், ஏன் உங்கள் முதலாளியை எதிர்பார்க்கிறீர்கள்? இதற்கு தேவை ஆதார் எண். அந்த ஆதார் எண்ணோடு உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும், அவ்வளவு தான்.நீங்கள் எத்தனை வேலைகள் மாறினாலும், இந்த யு.ஏ.என்., எண்ணையே எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்; யார் கையையும் எதிர்பார்க்காதீர்கள்; சுயசேவை தான் சிறந்த சேவை.
வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.
ஆயி­ரம் சந்­தே­கங்­கள்
தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.
ஆர்.வெங்­க­டேஷ்,
[email protected] ph:98410 53881

மூலக்கதை