திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை

தினகரன்  தினகரன்
திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை

லண்டன்: முன்னாள் உலக அழகியும், நடிகையுமான பிரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோனஸ் தம்பதி, தாங்கள் பெற்றோர் ஆகியிருப்பதாக சமூக வலைத்தளத்தில் நேற்று அறிவித்தனர்.தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, இப்படத்தில் இமான் இசையில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடினார். பிறகு பாலிவுட்டுக்கு சென்ற அவர், அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். தொடர்ந்து ஹாலிவுட் படங்கள் மற்றும் டி.வி தொடரில் நடித்து வருகிறார். ஏராளமான விளம்பரப் படங்களிலும் தோன்றியுள்ளார். உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக ஃபோர்ப்ஸ் இதழ் அவரை தேர்ந்தெடுத்து இருக்கிறது. கடந்த 2018ல் பாடகர் நிக் ஜோனஸ், பிரியங்கா சோப்ராவின் காதல் திருமணம் நடைபெற்றது. தன்னை வி்ட 10 வயது குறைந்த நிக் ஜோனசை திருமணம் செய்துகொண்ட பிரியங்கா சோப்ராவுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், அதுபற்றி அவர் கவலைப்படவில்லை. இந்து மதத்தை சேர்ந்த பிரியங்கா சோப்ராவும்,  கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நிக் ஜோனசும் தங்கள் மத வழக்கப்படி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தள பக்கங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த நிக் ஜோனஸ் என்ற பெயரை நீக்கினார். இதையடுத்து கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய திட்டமிட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியானது. ஆனால் பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனசும் வாடகை தாய் மூலம் பெற்றோர் ஆகியுள்ளனர். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் இருவரும் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தற்போது நாங்கள் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்றுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரத்தில் தற்போது நாங்கள் எங்கள் குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்து வதால், எங்கள் தனிப்பட்ட சுதந்திரம் கருதி யாரும் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளனர்.சமீபகாலமாக பாலிவுட்டில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது. அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்துள்ள நடிகை பிரீத்தி ஜிந்தா, வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹர், திருமணமே செய்துகொள்ளாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார். பாலாஜி டெலிபிலிம் நிறுவனர் ஏக்தா கபூர், திருமணம் செய்துகொள்ளாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார். நடிகர் ஷாருக்கான் தனது 3வது குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டார். நடிகை ஷில்பா ஷெட்டி தனது 2வது குழந்தையை வாடகை தாய் மூலமாக பெற்றுள்ளார்.

மூலக்கதை